1. பழையன கழிதல் புதியன புகுதல்
ஒரு
மின்னல் அடித்தது. இதுவரை அப்படியொரு மின்னலை ஊரார் யாரும் பார்த்ததில்லை. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை
வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. எவ்வளவு வெளிச்சமாக இருந்ததென்றால் அந்த ஊர் அவர்கள் இதுவரை பார்த்திராத அழகில் ஒளிவீசியது.
கடந்தகாலம்
மட்டுமல்ல எதிர்காலமும் தெரிந்தது.
அந்த
மின்னலில் எல்லோரும் குளித்தார்கள். அந்த மின்னலை எல்லோரும் அருந்தினார்கள். அந்த மின்னலை எல்லோரும் சாப்பிட்டார்கள்.
அவர்களை
மின்னலாக மாறினார்கள். மின்னல் அவர்களாக மாறியது. பிறகு
எல்லாம் பழைய மாதிரி ஆகிவிட்டது.
2.
ஒளி
என்
வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திராத ஒரு பெண்ணைச் சந்தித்தேன். தேவதையின் அத்தனை அம்சங்களும் அவளிடமிருந்தன. அவளுடைய ஒளிவீசும் புன்னகை என் ஆன்மாவில் சுடரேற்றியது. நான் ஒளியாக மாறினேன். என்னைப்
பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். எல்லோரையும் பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல மாறிவிட்டேன். என்னைப் பார்த்த எல்லோரிடமும் சுடரேற்றினேன்.
எல்லோரும்
தேவதைகளானார்கள். குழந்தைகளுக்கு மாயாஜாலக்கதைகளைச் சொன்னார்கள். பறவைகளைப் போலப் பறந்து திரிந்தார்கள் குழந்தைகள்.
வயதான
பெரியவர்கள் மேகங்களைப் போல மிதந்தார்கள்.
என்
வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திராத அந்தப் பெண்ணுக்கு இதெதுவும் பிடிக்கவில்லை. அவளுடைய ஒளிவீசும் புன்னகை மாறியது. இருளின்
குகையென அவள் கண்கள் இருண்டன.
என்னிடமிருந்த ஒளியை
அந்தக் கருந்துளைகளால் உறிஞ்சினாள். நான் கரிக்கட்டையானேன்.
ஆனால்
பாவம்! நான் ஒரு போதும் சந்தித்திராத அந்தப்பெண் அறியாள். என்னுடைய ஒளி இப்போது மக்களின் ஒளி.
3.
புல்ஷிட்
அவன்
ஒரு திரைப்படம் பார்த்தான்.
அதில்
இறந்தவர்கள் நடித்திருந்தார்கள். எல்லாரும் அவனுக்குத் தெரிந்தவர்கள். அவனுடைய நண்பர்கள் இருந்தார்கள். அவனைப் பிடிக்காதவர்களும் இருந்தார்கள். அவனைப் புகழ்ந்தவர்களும் இருந்தார்கள். இகழ்ந்தவர்களும் இருந்தார்கள். அவன் காதலித்த பெண்களும் இருந்தார்கள். அவனைக் காதலித்த பெண்களும் இருந்தார்கள். அவனுடைய பள்ளிநண்பர்கள் இருந்தார்கள். கல்லூரி நண்பர்கள் இருந்தார்கள்.
எல்லோரும்
பேசிக்கொண்டேயிருந்தார்கள்.
முதலில்
புரியாவிட்டாலும்
பிறகு புரிந்து விட்டது.
அவனைப்
பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனும்
கேட்டுக் கொண்டிருந்தான். அவனும் அவர்களுக்கருகில் உட்கார்ந்திருந்தான்.
அந்தத்
திரைப்படம் பல விருதுகளைப் பெறுமென்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சொன்னார்கள்.
அவனுக்குத்
தெரியும். அது வெறும் புல்ஷிட்...
நன்றி - புக் டே