Sunday 6 May 2018

யாருக்கு உரிமை?


யாருக்கு உரிமை?

உதயசங்கர்

தென்னூர் என்னும் ஊரில் நான்கு நண்பர்கள் பசவண்ணன், வள்ளல், ராமன், நாராயணன், வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். நான்குபேரும் சேர்ந்து நான்கு நிலங்களை அடுத்தடுத்து இருக்கிற மாதிரி வாங்கினார்கள். நான்கு நண்பர்களும் கலந்து ஆலோசனை செய்தனர். மேட்டில் இருந்த பசவண்ணன் வாங்கிய நிலத்தில் ஒரு கிண்று தோண்ட வேண்டும். அந்தத் தண்ணீரைக்கொண்டு மற்ற நிலங்களில் உழுது பயிர் செய்ய வேண்டும். விளைச்சலை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் இந்த ஆலோசனை பிடித்திருந்தது. 
பசவண்ணன் நிலத்தில் நால்வரும் சேர்ந்து கிணறு தோண்டினார்கள். தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து கிணறு கிடுகிடுவென நிரம்பிவிட்டது.
 மற்ற நண்பர்கள் வள்ளல், ராமன், நாராயணன், எல்லோரும் தங்களுடைய நிலத்தை உழுது பயிரிட்டார்கள். எல்லாநிலங்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது பசவண்ணன் பொறுப்பு. நாராயணனும், ராமனும், வள்ளலும்  நிலத்தை உழுது சீர் செய்தார்கள்.. நிலம் விதைப்பதற்குத் தயாராக மிடுக்காக இருந்தது. எல்லோரும் சேர்ந்து பாடுபட்டு உழைத்து பயிர் செய்து அறுவடை செய்தார்கள். அறுவடை செய்த தானியங்களை நான்குபேரும் சரிசமமாகப் பங்கிட்டுக்கொண்டார்கள். இப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள்.
அப்போது அவர்களுடைய நிலத்துக்கு எங்கிருந்தோ ஒரு குரங்கு வந்தது. அங்கிருந்த புளியமரத்தில் குடியேறிது. முதலில் அது பேசாமல் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களும் ஐயோ பாவம் என்று அவர்கள் சாப்பிடும்போது ஒரு உருண்டை சோற்றை குரங்கிற்குக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த சோற்றை கைகளில் வாங்கி அப்பாவி மாதிரி சாப்பிட்டது குரங்கு. சில நாட்கள் கழிந்தபிறகு அவர்கள் சாப்பிடும்போது அவர்களுடைய கைகளில் இருந்து எடுத்துத் தின்ன ஆரம்பித்தது. அவர்களுக்குக் கோபம் வந்தாலும் சரி பாவம் வாயில்லாப்பிராணி தானே என்று பொறுத்துக் கொண்டார்கள். அப்புறம் இன்னும் சில நாட்கள் கழித்து அவர்கள் சாப்பிட வருவதற்கு முன்னாலேயே அவர்களுடைய சாப்பாட்டை எடுத்து சட்டவட்டமாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தது
அதைப்பார்த்த பசவண்ணன், நாராயணன், வள்ளல், ராமன், எல்லோரும் சேர்ந்து குரங்கினை விரட்டினார்கள். குரங்கு அவர்களைப்பார்த்து வக்கணையாகப் பல்லைக் காட்டிக்கொண்டே ஓடிப்போய் விட்டது.
மறுநாள் பசவண்ணன் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வந்தான். அவன் வள்ளல் நிலத்துக்கு மடை திறந்து விடும் போது ஒரு குரல் கேட்டது.
” ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி…ஏமாளியப்பாரு
எல்லாத்தையும் கொடுக்கும் இந்தக் கோமாளியைப்பாரு
ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி…ஏமாளியப்பாரு
எல்லாத்தையும் கொடுக்கும் இந்தக் கோமாளியைப்பாரு”
அந்தச் சத்தத்தைக் கேட்ட பசவண்ணன் சுற்றிலும் பார்த்தான். புளியமரத்தின் மீது அந்தக்குரங்கு உட்கார்ந்திருந்தது. பசவண்ணன் அந்தக்குரங்கைப்பார்த்து,
“ நீயா இப்பப் பாடுனே? “ என்று கேட்டான். குரங்கு ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டே,
“ உன்னை மாதிரி ஏமாளி யாரும் இல்லையே..”
என்று கூறியது. பசவண்ணன் கோபத்துடன்,
“ ஏய் முட்டாள் குரங்கே! ஏதாவது உளறிக்கிட்டிருக்காதே..! “
“ உன்னுடைய நிலத்தில் இருந்து தானே தண்ணீர் பாய்ச்சுகிறாய்… தண்ணீர் இல்லை என்றால் நிலத்தில் என்ன செய்ய முடியும்? அது தரிசாக்கிடக்க வேண்டியது தானே.. உனக்கும் அவர்களுக்கும் சமப்பங்கா? என்ன கொடுமை பசவண்ணா! “
பசவண்ணன் யோசித்தான். அப்போது வள்ளலும் நாராயணனும், ராமனும் வந்தார்கள். அவர்களைப் பார்த்த உடன் பசவண்ணன்,
“ இனிமே பாதி அறுவடை எனக்குக் கொடுக்கணும்.. அப்பத்தான் நான் தண்ணீர் தருவேன்…” என்று சொன்னான்.
நண்பர்களுக்கு அதிர்ச்சி. திடீரென ஏன் இப்படிப் பேசுகிறான்? அவர்கள் பதில் பேசாமல் போய்விட்டார்கள்.
மறுநாள் வள்ளல் நிலத்திற்கு வந்தான். அப்போது அந்தக்குரங்கு வள்ளலிடம் பேசியது.
“ நிலம் இல்லாமல் தண்ணீரை மட்டும் வைத்துக்கொண்டு பயிர் வைக்கமுடியுமா? அதுவும் தண்ணீர் பாய்கிற முதல்நிலம் உன்னுடைய நிலம். விளைச்சல் அதிகம். நீ எல்லாவற்றையும் சமமாகக் கொடுக்கிறாய்..ஐயோ பாவம்! “
வள்ளல் குரங்கு பேசுமா என்று கூட நினைக்கவில்லை. உடனே மற்ற நண்பர்களிடம் போய் ” விளைச்சலில் பாதி எனக்கு வேண்டும்.. இல்லை என்றால் இனி நிலத்தில் பயிர் வைக்கப்போவதில்லை. ” என்றான்.
ராமனும், நாராயணனும் கூட சண்டை போட்டார்கள். கடைசியில் நண்பர்கள் பிரிந்து விட்டார்கள். நிலம் பாழாகி விட்டது. கிணற்றை யாரும் பயன்படுத்தவில்லை. நீரூற்று அடைத்து விட்டது. கையில் இருந்த தானியங்களும் காலியாகி விட்டன. உணவுக்கு வழியில்லாமல் போனது. நண்பர்கள் எல்லோரும் கூலி வேலைக்குப் போனார்கள். பாடுபட்டு உழைத்தும் சரியாகச் சாப்பிடமுடியவில்லை.
ஒரு நாள் நான்கு நண்பர்களும் தங்களுடைய நிலங்களைப் பார்க்கலாம் என்று போனார்கள். அங்கே கூட்டம் கூட்டமாக குரங்குகள் குடியிருந்தன. அதைப்பார்த்த நான்கு நண்பர்களுக்கும் கோபம் வந்தது.
நான்கு பேரும் சேர்ந்து அந்தக்குரங்குகளை அடித்து விரட்டினார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கின் பேச்சைக்கேட்டு நாம் இப்படி மோசம் போனோமே என்று வருந்தினர். ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். பின்பு அவர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தில் பயிர் செய்ய ஆரம்பித்தார்கள்.
அப்புறம் என்ன?
அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?



No comments:

Post a Comment