Sunday 13 December 2015

பருத்திக்காடு

பருத்திக்காடு
உதயசங்கர்

என்னை ஒரு பெரிய எழுத்தாளன் என்று நினைத்து புதிதாக எழுதுகிற நண்பர்கள் தங்களுடைய கதை, கவிதைகளைக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுத்து அபிப்ராயங்களைக் கேட்பார்கள். நானும் அவர்கள் மனம் புண்படாத வகையில் அவர்களுடைய படைப்புகள் பற்றியும் அவர்கள் வாசிக்க வேண்டிய இலக்கிய நூல்கள் பற்றியும், அவர்கள் பயணப்பட வேண்டிய திசை குறித்தும் எனக்குத் தெரிந்தவரையில் சொல்லி விடுவேன். சிலர் அத்துடன் விட்டால்போதும் என்று ஓடிவிடுவார்கள். சிலர் என் மீது கொண்ட அபிமானத்தால் தொடர்ந்து அவர்களுடைய படைப்புகளைக் கொண்டு ( அனுப்பியும்) வந்து கொடுப்பார்கள்.
அப்படிக் கொடுத்தவர்களில் கா.சி.தமிழ்க்குமரனின் முதல் கதை நான் தேர்வு செய்து மகளிர் சிந்தனை இதழில் வந்தது. அவர் இரண்டு தொகுப்புகள் போட்டுவிட்டார். பின்னர் குமாரபுரம் ஸ்டேஷனுக்கே வந்து தன்னுடைய முதல் கதையை கொடுத்தவர் ஜே.பொன்னுராஜ். அவருடைய முதல் தொகுப்பு பருத்திக்காடு இப்போது வெளிவந்துள்ளது.
அநேகமாக பருத்திக்காடு தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளையும் கையெழுத்துப்பிரதியிலே வாசித்து விட்டதனால் அந்தப்புத்தகத்தைப் பற்றி சற்று காலதாமதமாக எழுத வேண்டியதாகி விட்டது.
நீண்ட நாள் கழித்து எங்களுக்கு அசலான கரிசல் எழுத்தாளர் எழுத்தாளர் கிடைத்திருக்கிறார். அச்சு அசலான கரிசல் கிராமத்தையும், அதன் வாழ்க்கையையும் படம் பிடித்திருக்கிறார். மறந்து விட்ட கரிசல் கிராமத்தின் மொழி, அதன் பொருள்சார் பண்பாட்டு உபகரணங்கள், என்று ஆச்சரியப்படுத்துகிறார். ஜே.பொன்னுராஜின் உலகம் மிக எளியவர்களின் உலகம், ஆதரவற்ற பருத்திக்காடு ஆக்காட்டி ஆச்சி, பருத்தி போட்ட ரூபாயில் வரும் தாயம்மா, ஒத்தைக்கதவு கதையில் வருகிற ஆச்சி, கந்தசாமியின் சைக்கிள் கதையில் வரும் வேலாயி, பாசக்காரியில் வருகிற பவளம் என பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒரு ஞானியைப்போல எதிர் கொள்கிறார்கள். குழந்தைகளின் இயல்பை அவ்வளவு இயல்பாக இவரைப் போல யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதேபோல விரிவான காட்சிச்சித்தரிப்பைத் தேர்ந்த ஒரு ஓவியரைப்போல வரைந்து காட்டுகிறார். எல்லாக்கதையிலும் ஒரு ஆழ்ந்த அமைதியான குரலோடு கதை சொல்கிறார் ஜே.பொன்னுராஜ். பெரிய திருப்பங்களோ, உணர்ச்சிச் சுழிப்புகளோ இல்லாத புனைவுலகம் அவருடையது. அனைத்துக்கதைகளிலும் கரிசல் விவசாயமும், விவசாயிகளும் வருகிறார்கள். மிக அபூர்வமான மொழிநடை கொண்ட ஜே.பொன்னுராஜ் மிக விரைவில் தமிழின் முன்னணி எழுத்தாளராக வருவார் என்ற நம்பிக்கைக்கு கட்டியம் கூறும் தொகுப்பு பருத்திக்காடு! வாழ்த்துக்கள் ஜே.பொன்னுராஜ்!

பருத்திக்காடு
என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை-130/-


2 comments:

  1. உண்மையில் பெரிய எழுத்தாளர்தான் நீங்கள்,தங்களிடம் வம்பு பண்ணி அபிப்ராயம் கேட்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் இதுநாள்வரை/
    நினைக்கலாம்தானே தோழர்,,,?

    ReplyDelete