Friday 24 October 2014

அன்றாடங்களின் முகவிலாசம் மாற்றிய கவிஞன் கலாப்ரியா

உதயசங்கர்kalapriya

இது கவிஞர் கலாப்ரியாவின் நாள். இதோ இனிமையாய் காலைப்பொழுது விடிகிறது. கிணிங் கிணிங் என்று மணியடித்தபடி பால்க்கார அண்ணாச்சியோ உப்போய் உப்பு என்று கூவிக் கொண்டு போகும் உப்பு விற்பவரோ, ஒரு லாவகத்துடன் தினசரி நாளிதழை வீட்டுக்குள் வீசி விட்டுப் போகும் பேப்பர் போடும் பையனோ கீரை வாங்கலியோ கீரை என்ற சத்தத்துடன் செல்லும்கீரைக்கார அம்மாவோ, தான் இந்தக் காலைப்பொழுதைத் துவக்கி வைக்கிறார்கள். அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வீடுகள் முழித்துக் கொள்கின்றன. ஒரு புதிய நாளுக்கான சக்தியைச் சேகரித்துக் கொண்ட பெண்கள், அடுக்களையில் பாத்திரங்களைப் புழங்கும் சத்தம் கேட்கத் துவங்குகிறது. பெண்களும், ஆண்களும், குழந்தைகளும், இந்த நாளை, இந்த உலகத்தை இயக்கத் தொடங்குகிறார்கள். இனிமை, கசப்பு, வெறுப்பு, அன்பு, காதல், கருணை, அதிகாரம், நேசம், என்று எல்லாச்சுவைகளோடும் இந்த நாள் கழிகிறது. மாலையில் சூரியன் மங்கத்தொடங்கும் போது எல்லோரும் அப்பாடா இன்னும் ஒரு நாள் கழிந்தது என்று ஆனந்தமும் பெருமூச்சும் விடுகிறார்கள். இந்த நாளில் என்ன விசேசம்? எல்லா நாளையும் போல இன்னுமொரு நாள். அப்படியா? அப்படித்தானா? நேற்றைப் போலவா எல்லாம் நடந்தது! இல்லையே. நேற்றின் சாயல் இருப்பதினால் மட்டும் நேற்றும் இன்றும் ஒன்றாகி விடுமா? நேற்றை விட இன்று எவ்வளவு அழகு? எவ்வளவு உயிர்த்துடிப்பு? நேற்று இந்த வேம்பு பூக்கத்தொடங்கவில்லை. இன்றானால் கொத்துக் கொத்தாய் வெள்ளைச் சிரிப்புடன் மரமே மலராய் மலர்ந்து நிற்பதைப் பாருங்கள்! நேற்று இந்த நாய் குட்டிகளுடன் இல்லை. இன்று தாய்மையின் பூரிப்புடன் தன் குட்டிகளை அணைத்துக் கொண்டு கிடப்பதை பாருங்கள்! நேற்று பள்ளிக்கூடம் செல்ல அழுது அடம் பிடித்த குழந்தை இன்று சிரித்துக் கொண்டே அம்மைக்கு டாட்டா சொல்வதைப் பாருங்கள்! இப்போது சொல்லுங்கள்! எல்லா நாளும் ஒன்றா?

கவிதை என்றால் தனிமையில் உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்த மோனத்தில் மூழ்கி கற்பனை உலகத்திலிருந்து காவியமாக சொற்களைத் தேர்ந்தெடுத்து அழகான மாலையாகத் தொடுத்து கொடுப்பதல்ல. மிகச் சாதாரணமான நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கவித்துவமான தருணங்களே கண்டுகொள்ளும் கவி மனம் வேண்டும். கவி மனம் என்றால் வேறொன்றுமில்லை. குழந்தையின் மனம் வேண்டும்.. அந்த மனம் தான் கவிஞர்களின் மனம். அந்தச் சாதாரண சம்பவங்களின் கவித்துவமான தருணங்களை தன் மொழியால் கவிதையாக்கி அசாதாரணமான ஒரு உண்மையை, ஒரு உணர்வை, ஒரு அழகை, ஒரு அநுபவத்தை, தருகிற கவிஞர். கலாப்ரியா. கலாப்ரியாவின் கவிதைகளில் தினசரி சம்பவங்களே கவிதை உருக்கொள்கின்றன என்றாலும் அது வாசித்ததும் மறந்து போகும் செய்தியாக இல்லை. அன்றாட சம்பவங்களிலிருந்து ஒரு ஆச்சரியத்தை, ஒரு அழகைக் கண்டுபிடிக்கிறார் கவிஞர்.கலாப்ரியா. வாழ்வின் ஆனந்தத்தையும் அழகையும், அற்புதத்தையும், நகை முரணையும் துயரத்தையும் நம் மனம் விம்மச் சொல்கிறார்.

கொலு வைக்கும்

வீடுகளில்

ஒரு குத்து சுண்டல்

அதிகம் கிடைக்குமென்று

தங்கையைத்

தூக்க முடியாமல்

தூக்கி வரும்

அக்காக்குழந்தைகள்

யதார்த்த உலகில் நடக்கும் சம்பவம் கவிஞரின் பார்வையில் வேறொன்றாகத் தெரிகிறது. குழந்தைகளின் மனதை கவிஞர்களன்றி யாரால் புரிந்து கொள்ள முடியும்? அதனால் தான் சினிமா தியேட்டரில் ஒரு டிக்கெட்டில் இரண்டு பேரை எப்போதாவது அனுமதிக்கும் அண்ணாச்சி இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு போகிறான். எதற்கு?

தம்பிக்கு

அப்பா தந்த

நாலணாவைப்

பத்திரமாய்

தான் வாங்கி

வைத்துக் கொண்டு

அண்ணன்கள்.

அப்படி அநுமதித்து விட்டால் அந்த நாலணாவில் வாங்கித் திங்கலாமே என்ற ஆசை. எளிய மனிதர்களின் எளிய ஆசைகள். இளம்பருவக் காதலை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் கவிஞர் கலாப்ரியா பாருங்கள்;

பேனாவும்

நோட்டுகளும் என்னைப்

பெரியவனாக்கிய போது

சிலேட்டுகளை

நெஞ்சில் அணைத்து

கழுத்தைச் சாய்த்து

மூக்கையுறிஞ்சி

உன்னருகே நின்று

மனக்கணக்குப் போடுகிற

சுகமொன்று மறுக்கப்பட்டது

பூக்களின் காதல்

நினைத்துதிர்கிற புண்ணியங்கள்

இலைகளுக்கன்றி

மரங்களுக்கில்லை..சசி

தமிழ்க்கவிதையுலகின் மிக முக்கியமான கவிஞரான கலாப்ரியா பலதலைமுறைக் கவிஞர்களைத் தன் கவிதைகளால் பாதித்திருக்கிறார் என்றால் மிகையில்லை. அவருடைய கவிதைகளுக்குள் ஒரு கதை இருக்கும். காட்சிச்சித்திரங்களின் வழியே நம் வாழ்வின் யதார்த்தத்தை வலிமையாகச் சொல்வதில் கலாப்ரியாவுக்கு ஈடு இணை கிடையாது எனலாம்.

அழுது தொலைச்சிராதள்ளா

மானம் போயிரும்

நொடிக்கொரு தரம்

மகளை ( சத்தம் வெளிவராமல் )

அடக்கிக் கொண்டு

தானும் அழுகையை

ஜெயித்துக் கொண்டு

செத்துப்போன சிசுவைத் துணியில்

சுற்றி

கழுத்து தொங்கவிடாமல்

கவனமாக

வற்றிப்போன

மார்போடு அணைத்துக் கொண்டு

ஜெனரல் ஆஸ்பத்திரி

வாசலில்

டவுன் பஸ்ஸுக்காக

அம்மாவும்

அம்மாவும்.

கவிஞர் கலாப்ரியாவின் கலை மேதைமையைச் சொல்ல இதை விட வேறென்ன வேண்டும்?

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

1 comment:

  1. அருமையான பதிவு.
    மிக்க நன்றி.

    ReplyDelete