Tuesday 9 October 2012

விலகிக் கொண்டிருக்கும் மாயத்திரை

 

உதயசங்கர்

little-boy-reading

ஆதியில் கல்வி எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இந்தியாவின் கொடிய நோயான சாதியப்படிநிலைகளில் மேல் சாதியினர் மட்டுமே கல்வி கற்கும் உரிமையைத் தங்கள் கைகளில் வைத்திருந்தார்கள். மற்ற சாதியினருக்கு கல்வி கற்கும் உரிமையைக் கொடுக்காதது மட்டுமல்ல அப்படி அவர்கள் தெரியாத்தனமாகக் கல்வி கற்றால் அவர்களுக்குத் தண்டனைகளும் கொடுக்கப்பட்டது. அரசர்களின் ஆதரவோடு மனுதர்மம் என்ற பிராமணியச் சட்டவிதிகள் கடுமையாக நிறைவேற்றப் பட்டன. பெரும்பான்மை சமூகம் கல்வியறிவற்றவர்களாக வைக்கப் பட்டிருந்தனர். கல்வி ஒரு அதிகாரமையமாக செயல்பட்டது. உடல் உழைப்பு கீழானதாகக் கருதப்பட்டது.

மேல்சாதியினர் குருகுலக்கல்வி என்ற முறையிலேயே கல்வி கற்றனர். அந்தக் கல்வியும் வேதங்கள், உபநிஷதங்கள், மனுதர்மம், ராஜ்யபரிபாலன சட்டவிதிகள் என்ற அளவிலேயே இருந்தன. குறிப்பாக பிராமணர்களும் சத்திரியர்களும் மட்டுமே கல்வி கற்றனர். மக்கள் தொழில் சார்ந்த கல்வியை அவரவர் பட்டறிவின் மூலமே அடுத்தடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுத்தனர். இதெல்லாம் குப்தர்கள் காலத்தில் உருவாகி நிலைபெற்றது எனலாம். ஆனால் இதற்கு முன்பாக சமணர்களும், பௌத்தர்களும் கல்வியை அவரவர்களுடைய சமணப்பள்ளிகளிலும், பௌத்தவிகாரைகளிலும், சொல்லிக் கொடுத்தனர். பெண்கல்வியை முதன்முதலாய் நடைமுறைப்படுத்தியவர்களும் அவர்களே. பௌத்தமும், சமணமும் இந்து மதக் கொடுங்கோன்மையால் அழிக்கப்பட்டது. மனுதர்மம் தன் ஆதிக்கத்தைப் பரப்ப ஆரம்பித்தது. கல்வி மேல்சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது. அதற்கேற்ப புராண இதிகாசங்களில் கதைகள் உருவாக்கப்பட்டன.

ராமாயணத்தில் வேதம் கற்றதுக்காக ராமனால் சம்புகன் என்ற சாதியப்படி நிலைகளில் கீழ்நிலையில் இருந்தவர் தலை கொய்யப்பட்டு கொல்லப்பட்டார். மகாபாரதத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த வில், அம்பு, எய்வதில் பிறந்ததிலிருந்தே பயிற்சி பெற்றிருந்த ஏகலைவனின் கட்டைவிரலை பலிவாங்கியதும், கீழோர்கள் கல்வி கற்க அனுமதியில்லை என்ற இசைவை மக்களிடம் உருவாக்கவே கதைகளைத் திரித்து எழுதியும், சொல்லியும் வந்தனர். இப்படி வரலாறு முழுவதும் ஏராளமான கதைகள் மக்கள் மனங்களில் செதுக்கப்பட்டன.

நவீனக்கல்விமுறை ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே உருவானது. அதுவும் கூட ஆங்கிலேயர்கள் தங்களுடைய நிர்வாக வசதிக்காக உருவாக்கிய கல்விமுறை. மெக்காலே என்ற ஆங்கிலேயர், உடலால் இந்தியனாகவும், மனதால் ஆங்கிலேயனாகவும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைச்சேவகம் செய்ய இந்தியர்களை மாற்றுவதற்காகத் திட்டமிட்டு உருவாக்கியது. அதிலும் ஆரம்பகாலத்தில் மேல்சாதியினர் மட்டுமே கல்வி கற்று ஆங்கிலேய அரசில் பதவிகள் வகித்து இந்தியமக்களை ஆங்கிலேயர்களை விடக் கொடுமைப்படுத்தினர். நவீன முதலாளித்துவத்தின் தேவையே ஒருவகையில் கல்வியை ஜனநாயகப்படுத்தியது எனலாம். கல்வி ஜனநாயப்படுத்தப்பட்டு சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் தான் இருக்கும். அதிலும் சுமார் நூறு வருடங்களுக்குள்ளாகத் தான் சாதியப் படிநிலையில் கீழ்நிலையில் உள்ளவர்களும் கல்வி கற்கிற வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதிலும் சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்குள்ளாகத் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் பள்ளிகளில் இன்னமும் சாதிப்பாகுபாடு, இழிவு, தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இதற்கு மற்ற நாடுகளில் முதலாளித்துவம் அதற்கு முந்தைய காலகட்டமான நிலப்பிரபுத்துவத்தை அழித்ததைப் போல இந்தியாவில் அழிக்க முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் சாதிப்பாகுபாடுகளை நியாயப்படுத்துகிற மனுதர்மத்தின் ஆதிக்கம் தான். எனவே முதலாளித்துவம் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து கொண்டதோடு மட்டுமில்லாமல் கை கோர்த்தும் கொண்டது.

மெக்காலேயின் மனப்பாடக்கல்விமுறையில் மக்கப் பண்ணத் திறமையிருக்கிற மாணவர்கள் மதிப்பெண்கள் அதிகம் பெறுவதும், மக்கப் பண்ணத் திறமையில்லாத மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும் நேர்கிறது. மாணவர்களின் படைப்பாற்றல் மதிப்பெண்கள் மூலம் மட்டுமே மதிப்பிடப்படுவதால் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஒரு வித தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர்களும், பெற்றோர்களும் அவர்களை ‘ நீ எதற்கும் லாயக்கில்லை..’ என்றோ ‘ மாடுமேய்க்கத்தான் லாயக்கு..’ என்றோ திட்டி தண்டனைகள் கொடுத்து அவர்கள் மனதில் ஒரு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறார்கள். மற்ற சக மாணவர்கள் முன்னால் அவமானப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி கசக்கிறது. பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு உதிரி தொழில் சார்ந்த வேலைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

எல்லா குழந்தைகளையும் அவரவர் படைப்பூக்கம், திறமை, விருப்பம், ஆர்வம், சார்ந்து இன்றையக் கல்விமுறை அரவணைப்பதில்லை. அவர்களை ஊக்குவிப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் கல்விமுறையில் இல்லை. இதற்கு ஒரு வரலாற்றுக் காரணமும் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே கல்வி என்பது வேலைக்கான ஒரு சிபாரிசுக் கடிதம் போலவோ, பாஸ்போர்ட் மாதிரியோ கருதப்பட்டு வந்ததும் காரணமாக இருக்கலாம். கல்வி கற்பதின் மூலம் நல்ல வேலையில் சேரலாம். கை நிறைய சம்பாதிக்கலாம். என்பது தான் கல்வியின் நோக்கமாக இருக்கிறது.

இருபது, முப்பது, வருடங்களுக்கு முன்னால் அரசு ஆரம்பப் பள்ளிகளும் அரசு நடுநிலைப்பள்ளிகளும், அரசு உயர்நிலைப்பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று காளான்கள் போல தெருவுக்கு ஒரு நர்சரிப்பள்ளிக்கூடங்கள், கான்வெண்டுகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருத்திருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு விதமாய் கவர்ச்சி விளம்பரம் தருகின்றன. மாண்டிசோரிக்கல்விமுறை, இசை, ஓவியம், விளையாட்டு, நடனம், யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ், சுத்தமான அக்குவா குடிநீர், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், தனித்தனியாக மாணவர்கள் மீதான, கவனிப்பு, ஒழுக்கம், அது இது என்று தங்கள் பள்ளியை சந்தையில் ஒரு பொருளைக் கூவிக் கூவி விற்பனை செய்யும் வியாபாரியைப் போல விற்பனை செய்கிறார்கள். பெற்றோர்களும் தங்கள் குழந்தை எல்லாக்கலைகளிலும் விற்பன்னர் ஆக வேண்டுமென்றோ, தனியார் பள்ளிக்கூடத்தில் தான் கண்டிஷன் இருக்கும் என்றோ, இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தால் தான் பெருமை என்றோ, தங்கள் குழந்தையை மேதையாக்கி விடுவார்கள் என்றோ, அவரவர் ஊரில் எந்தப் பள்ளிக்கூடம் பெருமைமிகு பள்ளிக்கூடமோ அந்தப் பள்ளிக்கூடத்தில் தங்கள் குழந்தையை சேர்க்க ஆசைப்படுகிறார்கள். ஆசைப்பட்டால் போதுமா? ராத்திரியோடு ராத்தியாக பள்ளிக்கூட வாசல் கதவுக்கருகில் துண்டு விரித்து தூங்கி வரிசை போட்டு அப்ளிக்கேஷன் வாங்குகிறார்கள். ஊருக்குள் யாருக்கு அந்தப்பள்ளிக்கூடம் தெரியுமென்றாலும் அவரிடம் ரெகமெண்டேஷனுக்குப் போய் நின்று பள்ளிக்கூடத்தில் பெற்றோர்களுக்கு நடத்தும் இண்டர்வியூவுக்குப் போய் அவர்கள் கேட்கும் அத்தனை கண்டிஷன்களுக்கும் தலையாட்டி விட்டு எப்படியாவது, எவ்வளவு பணம் கட்டியாவது குழந்தையை அந்தப் புகழ் பெற்ற பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். கல்விக்கூடம் வியாபாரமுதலீடாகி விட்டது. அதனால் தான் புற்றீசல் போல கல்வித்தந்தைகள் நாடெங்கும் உருவாகி விட்டார்கள்.

பள்ளியில் சேர்த்த பிறகு பெற்றோர்கள் அந்தக் குழந்தையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அந்தப் பள்ளியைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதன் கல்விச் செயல்பாடுகள் பற்றியும் கேள்வி கேட்பதில்லை. ஸ்பெஷல் டொனேஷன் வேண்டுமென்றால் பள்ளி நிர்வாகம் பெற்றோராசிரியர் கழகத்தை கூட்டுவார்கள். டொனேஷன் கேட்பார்கள். குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் பெற்றோர்களையும் கூப்பிட்டு கண்டிப்பார்கள். பெற்றோர்களும் தாங்கள் பள்ளியில் படித்த காலத்தை விட தங்கள் குழந்தை படிக்கும் போது அந்தப் பள்ளிக்கூடத்தைப் பார்த்து அப்படி பயப்படுகிறார்கள். ஏனெனில் ஏதாவது கேள்வி கேட்டால் குழந்தையை பள்ளியை விட்டு விலக்கி விடலாம் அல்லது குழந்தையை பள்ளியில் துன்புறுத்தலாம் என்ற அச்சம் காரணமாக எதுவும் பேசுவதில்லை. பள்ளியும் சரியாக ஒன்பதாவது வகுப்பு முடியும்போது சராசரியாக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பி விடுகிறார்கள். ஏனெனில் பத்தாவது வகுப்புத் தேர்வில் ரிசல்ட் காண்பிக்கவேண்டும் என்கிறார்கள். பெற்றோர்களின் கோபம் குழந்தையின் மீது பாய்கிறது. நியாயமாகப் பார்த்தால் பெற்றோர்களின் கோபம் பள்ளியின் மீது தானே பாய வேண்டும். புத்தம் புது மலராய் எல்.கே.ஜி.யில் கொண்டு போய் சேர்த்த குழந்தைக்கு, கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்கள் அந்தக் குழந்தைக்கு ஏற்ற முறையில் கல்வி கற்பிக்க முடியாமல் அந்தக் குழந்தையைப் பாழாக்கி, குழந்தைக்குத் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி பள்ளியை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள்.

இதற்கு முதல் காரணம் பெற்றோர்கள் தான். பெற்றோர்களின் ஆட்டுமந்தை மனோபாவம், தங்கள் குழந்தையைப் பற்றிய அறியாமை, பொதுவெளியில் கல்வி குறித்த விவாதமின்மை, அரசாங்கத்தின் திட்டமிட்ட புறக்கணிப்பு, எல்லாம் சேர்ந்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய தரமான, சமச்சீரான கல்வியை மிகக் குறுகிய காலத்தில் அதாவது சுதந்திரமடைந்து அறுபத்தாறு வருடங்களுக்குள் சீரழித்து விட்டிருக்கிறது. ஆனாலும் இடதுசாரிகளின் தொடர்ந்த போராட்டங்களினால் சில மாற்றங்கள் பெயரளவுக்கேனும் ஏற்பட்டிருக்கிறது. கல்வி குறித்த விவாதங்கள் பொதுவெளியில் நிகழ்ந்திருக்கிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் பற்றிய கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. சற்றே மாயத்திரை விலகுவது போலத் தோற்றம் தெரிகிறது.

நன்றி- இளைஞர் முழக்கம்

No comments:

Post a Comment