Monday 27 August 2012

இப்படியே

abstract-art-painting-shadesofpeace உதயசங்கர்

 

சகிக்க முடியாத வாழ்வினை

வாழ்ந்து தீர்க்கவே

வாழச் சபிக்கப் பட்டிருந்தவர்

கைகளும் கால்களும் கட்டப்பட்டு

கசப்பின் கடலை ஒவ்வொரு

துளியாகக் குடிக்கும்படி

வாழ்க்கை சிறைப்படுத்தியிருந்தது

எதிரே பெருஞ்சூனியம்

திரை விரித்திருந்தது

நம்பிக்கைக்கீற்றாய்  

ஆசி வழங்கிக் கொண்டிருந்தது 

தொலைக்காட்சிப்பெட்டியில்

ஒரு வல்லூறு 

பழக்கத்தின் துருவேறிப் போனதால்

இப்போதெல்லாம்

அவரே கசப்புக்கடலின் ருசியை

வேண்டி வாழ்க்கையிடம் மன்றாடுகிறார்

கட்டப்பட்டிருந்த கை கால்களே

விடுதலையின் சின்னமென

தோன்றிய போதத்திற்குச்

சிறகுகள் முளைத்து

புன்னகை தேசத்தில்

அவரைக் கொண்டிறக்கியது

இப்படியே அவர் மகிழ்ச்சியாக

வாழ்ந்து கொண்டிருக்கிறார்

இப்படியே நான் மகிழ்ச்சியாக

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

இப்படியே நீ மகிழ்ச்சியாக

வாழ்ந்து கொண்டிருக்கிறாய்

No comments:

Post a Comment