Sunday 22 July 2012

என் மலையாள ஆசான் டி.என்.வி.

 

 

உதயசங்கர்

T.N.VENKITESWARAN_THRISSUR

1986-ஆம் ஆண்டு கோவில்பட்டியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட செடியாக நான் வேளானந்தல் ஸ்டேஷனில் போய் விழுந்து கிடந்தேன். வாடி வதங்கி ஒரு துளி உயிர்நீருக்காகத் தவித்துக் கொண்டிருந்தேன். மதுரையைத் தாண்டி வெகுதூரம் போனதில்லை. திருச்சிக்கே ஸ்டேஷன் மாஸ்டர் பயிற்சிக்காகப் போனது தான். அப்போதும் யாருடனும் சகஜமாகப் பழகவில்லை. காரணம் எனக்கு அவ்வளவு சகஜமாக யாருடனும் பழகத் தெரியாது என்பது தான். பயிற்சி முடிந்து மேலும் வடக்கே போஸ்டிங் போட்ட போது இன்னும் உள்ளுக்குள் சுருங்கிப் போனேன். எப்போதும் தனிமை என்னைச் சூழ்ந்து இருளெனக் கவிந்திருந்தது. புதிய ஊர், புதிய மக்கள், புதிய மொழி என்னை மேலும் கலவரப்படுத்தியது. தமிழ் தான் என்றாலும் அந்த மக்களின் மொழியே எனக்குப் புரியவில்லை. அதைப் புரிந்து கொள்ளவே கொஞ்ச நாட்களாகியது. எல்லோரும் முரட்டுத்தனமானவர்களாக தெரிந்தார்கள். அதெல்லாம் என் மனப்பிரமை தான். அது மட்டுமல்லாமல் அன்றாடம் இலக்கியம், அரசியல், தத்துவம் என்று பேசித் திரிந்து கொண்டிருந்த நாட்கள் என் கண்ணிலேயே நின்று கொண்டிருந்தது. ஆனால் ரயில்வே ஸ்டேஷன் என்பது வேறு ஒரு உலகமாக இருந்தது.

ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எந்தப் பொது விஷயங்களையும் பேசுவதில்லை. நான் தாகத்தால் தவித்துப் போனேன். இப்படியே ஒரு மாதம் கழிந்து விட்டது. யாரோடும் ஒட்ட முடியாமல் நான் தனியாகவே இருந்தேன். உடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் என் மீது அநுதாபம் காட்டினர். அதற்கு மேல் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது தான் பக்கத்து ஸ்டேஷனான தண்டரையிலிருந்து வாராந்திர ஓய்வு தருவதற்காக டி.என்.வெங்கடேஸ்வரன் என்ற ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். காலையில் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை செல்லும் வண்டி எண்.646 பாசஞ்சர் ரயிலில் வந்திறங்கி முகமன் கூறி அறிமுகப்படுத்தியவர் மேஜை மீது இருந்த கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலைக் கையில் எடுத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதுவரை நான் எந்தப் புத்தகம் வைத்திருந்தாலும் யாரும் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. அவர் தொழிற்சங்கத் தலைவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். கேரளாவில் திருச்சூருக்கருகில் உள்ள முள்ளூர்க்கரையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் ரயில்வே நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபரில் தண்டரை வந்திருந்தார். அவருக்குத் தமிழ் தெரியும் என்பது மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியப்பரிச்சயமும் இருந்ததைக் கண்டு வியந்து போனேன்.

பிறகென்ன அவர் புதுமைப்பித்தனின் கதைகள், ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள், கு.சின்னப்பாரதியின் தாகம், டி.செல்வராஜின் மலரும் சருகும், மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் என்று பேச, நான் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்த பஷீரின் இளம் பருவத்தோழி, பாத்தும்மாவின் ஆடு, என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, நாவல்களையும், தகழியின் செம்மீனையும், கேசவதேவின் கண்ணாடியையும், அந்தச் சமயத்தில் வெளிவந்திருந்த நவீன மலையாளச் சிறுகதைத் தொகுப்பான சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் புத்தகத்தைப் பற்றிப் பேச அந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாளாக ஆகி விட்டது. அது மட்டுமல்லாமல் ஊர் ஊராக மக்களிடமிருந்து பணம் பெற்று ’ அம்ம அறியான் “ என்ற மக்கள் சினிமா எடுத்த மகத்தான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரகாமுக்கு திருச்சூரில் பண உதவி செய்த தகவலையும் அவர் சொன்னார். தண்ணீரிலிருந்து எடுத்துப் போட்ட மீனாகத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு டி.என்.வி. பெருங்கடலாகத் தெரிந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் வேளானந்தல் வரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினேன். அவர் வந்து விட்டால் அவரை விட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நகர்வதில்லை. அரசியல், தொழிற்சங்கம், இலக்கியம், எல்லாவற்றிலும் ஞானமுடையவராக இருந்தார் டி.என்.வி. அவருடைய அநுபவங்களைக் கேட்டாலே ஒருவன் விவேகமும் தைரியமும் உடையவனாக ஆகி விடுவான்.

எத்தனை டிரான்ஸ்ஃபர்கள்! எத்தனை சம்பள வெட்டுகள்! எத்தனை விசாரணைகள்! 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதனால் 1978-ஆம் ஆண்டு வரை பணி நீக்கம்! கோட்டம் விட்டு கோட்டம் டிரான்ஸ்ஃபர்கள்! இன்னொருவராக இருந்தால் இதற்குள் போராடியதின் எந்தச் சுவடும் இல்லாமல் முடங்கிப் போயிருப்பார்கள். ஆனால் டி.என்.வி. அயராத போராளியாக இருந்தார். அவரிடமிருந்த தீரத்தில் கொஞ்சமாவது எனக்கு இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அவர் என்னை விட பதினைந்து வருடங்களுக்கு மூத்தவர். ஆனால் தான் வயதிலோ, அநுபவத்திலோ, முதிர்ச்சியிலோ பெரியவன் என்று காட்டிக் கொள்ளாத அருங்குணம் கொண்டவர். என் வயதிலுள்ள இளைஞர்களுக்கு இணையாக கேலியும் கிண்டலுமாக பேசுவார். எனக்கு அவரை விட்டுப் பிரிய மனமேயில்லை. அதனால் எனக்கு ஓய்வாக இருக்கும் போது நான் தண்டரை போய் விடுவேன்.

அப்போது விழுப்புரம்- காட்பாடி செக்‌ஷனில் நிறைய மலையாளிகள் ஸ்டேஷன் மாஸ்டர்களாகப் பணி புரிந்தார்கள். அவரவர் ஓய்வு நாளில் தண்டரை ஸ்டேஷனைப் பார்த்து புற்றீசல் போல புறப்பட்டு விடுவார்கள். அன்று முழுவதும் கொண்டாட்டம் தான். குடம் நிறைய குடிக்கக் கள்ளு, வாத்துக்கறி, மீன் குழம்பு, மாட்டுக்கறி வறுவல், என்று விருந்து தயாராகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டே மலையாளக் கவிதைகளைப் பாடுவார்கள். அதிலும் எமர்ஜென்சி காலத்தில் மலையாளக்கவி கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் எழுதிய “ நிங்ஙள் எண்ட கருத்த மக்கள கொன்னு தின்னல்லோ..” என்ற கவிதையை அவர்கள் கோரஸாகப் பாடும்போது ஆக்ரோஷம் பொங்கும். உண்மையில் அவர்கள் வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தார்கள். எனக்குப் பொறாமையாக இருந்தது. அவர்கள் யாரும் தீவிர இலக்கிய வாசகர்கள் கிடையாது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் வள்ளத்தோல், தொடங்கி பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றேகாட்,மலையாற்றூர் ராமகிருஷ்ணன், உரூபு, கமலாதாஸ், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி., முகுந்தன், காக்கநாடன், என்று அத்தனை எழுத்தாளர்களையும் சாதாரணமாக வாசித்திருந்தார்கள். அவர்களுக்கு அவர்களுடைய மொழியின் மீது உண்மையான பெருமை இருந்தது. தமிழை அரசியல் லாபத்துக்காக மட்டும் மொழியைப் பற்றிப் பேசுகிற தமிழக அரசியல்வாதிகளைப் போலவோ, மொழியைப் பற்றி எந்தப் பெருமிதமுமில்லாத தமிழ் மக்களைப் போலவோ அவர்கள் இல்லை. அநேகமாக தமிழ்மக்கள் சினிமாக்களால் மட்டுமே வளர்க்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது. கலை, இலக்கியம், அறிவியல் எல்லாம் இரண்டாம்பட்சம் தான். இங்கே சாதாரணமாக படித்தவர்களிடமே தமிழ் இலக்கியத்தைப் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி அறிவியலாளர்களைப் பற்றி கேட்டால் என்ன தெரியும் என்பது கேள்விக்குறியே.

எனக்கு வந்த பொறாமையில் நான் மலையாளம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். என் ஆசையை டி.என்.வி.யிடம் சொன்ன போது உற்சாகமாக எனக்கு அட்சரம் எழுதிக் கொடுத்து உடனே என் ஆசானாகி விட்டார். மற்ற மலையாளத் தோழர்களும் அவரவருக்கு முடிந்த அளவில் எனக்குப் புத்தகங்கள் கொடுத்தும், விளக்கம் சொல்லியும், வாசிக்கச் சொல்லிக் கொடுத்தும் என்னை ஊக்குவித்தனர். அஜய்குமார், ரியாஸ் அலிகான், ராஜன் வர்கீஸ், கேசவ பணிக்கர், என்று எத்தனை நண்பர்கள்! நான் இப்போது ஒரு பத்து புத்தகங்களுக்கு மேல் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து நானும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற தகுதியோடு இருப்பதற்கு என் ஆசான் தோழர் டி.என்.வி. தான் காரணம்.

மிகச் சிறந்த பேச்சாளரான டி.என்.வி. ரயில்வே தொழிலாளர்களின் விசாரணையில் டிஃபென்ஸ் கவுன்சிலராகவும் போவார். என்ன தான் அவர் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அவரைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பயம் தான். ஏனெனில் அவரால் யாரையும் தன் வசப்படுத்தி விடமுடியும்.யார் சொன்னாலும் கேட்காத, மூக்கய்யர் என்று புகழ் பெற்ற பரமேஸ்வர அய்யரையே வசப்படுத்தியவர் என்ற கதை தெற்கு ரயில்வே முழுவதும் பேசப்படுகிற கதை.

1974- ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட டி.என்.வி. தன் குடும்பத்தைக் கொண்டு செலுத்த ஊட்டியிலிருந்து தேயிலைத்தூளை மொத்தமாக வாங்கி திருச்சூரில் வினியோகம் செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் போட்டோ ஸ்டுடியோக்களில் நெகடிவ் கழுவி முடித்த ரசாயனத்தை வாங்கி அதிலிருந்து சில்வர் நைட்ரைட்டைப் பிரித்து விற்பனை செய்திருக்கிறார். எப்படியோ ஜனதா ஆட்சிக் காலத்தில் மீண்டும் வேலையில் சேர்ந்த டி.என்.வி. ஒரு வருட காலத்துக்குள்ளே அடுத்த வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்டார். அப்போது முள்ளூர்க்கரை ஸ்டேஷனில் மூக்கய்யர் தான் ஸ்டேஷன் மாஸ்டர். மூக்கு நீண்டு முன்னாடி வளைந்திருந்ததால் அவர் பரமேஸ்வர அய்யர் மூக்கய்யர் ஆகி விட்டார். ஆனால் ஆளு டெர்ரர். அவருக்குக் கீழே பணி புரியும் அத்தனை பேருக்கும் அவர் ஒரு பார்வை பார்த்தாலே போதும் வயிறு கலங்க ஆரம்பித்து விடும். ஆபீசர்களையே பெயர் சொல்லித் தான் கூப்பிடுவார். அவர் ஆபீஸுக்குக் கடிதம் எழுதினார் என்றால் அதற்கு அப்பீலே கிடையாது. அதிகம் பேச மாட்டார். நிர்வாகத்தில் கில்லாடி. எப்போதும் மேலிடத்துக்குச் சாதகமாகவே நடந்து கொள்பவர் என்றெல்லாம் அவரைப் பற்றிப் பல ஒளிவட்டங்கள் சுழன்று கொண்டிருந்தன. அவருக்கு டி.என்.வி.யை பிடிக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. பிடித்திருந்தது என்றும் சொல்ல முடியாது. ஆனால் டி.என்.வி.யைப் பற்றி எல்லாம் விசாரித்து வைத்திருந்தார். அதனால் டி.என்.வி.யிடம் சற்று மரியாதையுடனும் நடந்து கொண்டார். 1978- ஆம் ஆண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களின் சங்கமான ஆல் இந்தியா ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் தங்களுடைய யூனிஃபார்ம், பணி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக கூட்ஸ் வண்டிகளை வாங்கவோ, அனுப்பவோ போவதில்லை என்று வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர். வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த வேலைகளை டி.என்.வி. செய்து கொண்டிருந்தார். பிரச்சாரப்பயணம், துண்டுப்பிரசுரம், போஸ்டர், என்று வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் அவ்வப்போது ஆபீஸுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் மூக்கய்யர். அந்த மாதத்தில் அவர் பணி ஓய்வு பெறப் போகிறார். அதனால் இன்னும் அதிகமான விசுவாசத்தோடு நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நினைத்தார்.

வேலை நிறுத்தத்துக்கு முதல் நாள் டி.என்.வி. டூட்டி முடியும் போது மூக்கய்யர் தான் அவரை மாற்றி விட வந்திருக்கிறார். அவரிடம் நாளைக்கு வேலை நிறுத்தம் என்பதைச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டர்களின் கோரிக்கைகளின் நியாயம் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசியிருக்கிறார். மூக்கய்யர் கேட்டாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் டி.என்.வி. சொல்லி விட்டு கடைசியாக அவரும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு விட்டு நம்பிக்கையில்லாமல் வீட்டுக்குப் போய் விட்டார்.

வேலை நிறுத்தநாளன்று காலையில் டூட்டிக்கு வந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே கூட்ஸ் வண்டியை அனுப்ப மறுத்திருக்கிறார் டி.என்.வி. ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்த நிர்வாகம் உடனே அவரை சஸ்பெண்ட் செய்து விட்டு மூக்கய்யரை டூட்டியில் சேர அழைப்பு விடுத்தது. நிர்வாகத்திலிருந்து இன்ஸ்பெக்டர்கள், மூக்கய்யர் வந்து டூட்டி எடுத்து கூட்ஸ் வண்டியை அனுப்பக் காத்திருந்தார்கள்.

குவாட்டர்ஸிலிருந்து ஃபுல் யூனிஃபார்மில் தலையில் தொப்பியுடன் ஸ்டேஷனுக்கு வந்தார் மூக்கய்யர். உள்ளே நுழைந்தவுடன் இன்ஸ்பெக்டர்களிடம் பேசி அலுவலக சஸ்பெண்ட் ஆணையை டி.என்.வி.க்கு கொடுத்து விட்டு அவரை டூட்டியிலிருந்து விடுவித்தார். அதற்குள் இன்ஸ்பெக்டர்கள் சார் முதல்ல கூட்ஸை அனுப்புங்க சார்.. என்று வற்புறுத்தினார்கள். மூக்கய்யர் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு டூட்டியில் ஜாயின் பண்ணுவதற்கான எல்லாஃபார்மாலிட்டிகளையும் முடித்து விட்டு, நாற்காலியில் உட்கார்ந்து தலையில் இருந்த தொப்பியை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு அந்த இன்ஸ்பெக்டர்களைப் பார்த்து நானும் கூட்ஸை அனுப்ப மாட்டேன் என்றாரே பார்க்கலாம். யாருமே மூக்கய்யரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அந்த கூட்ஸ் வண்டியையே ரத்து செய்யவேண்டியதாயிற்று. அந்த வேலை நிறுத்தமும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால் டி.என்.வி.யை டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார்கள். அவ்வளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார் டி.என்.வி.

வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் டி.என்.வி. ஆனால் இப்போதும் தொழிலாளர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும், அவர்களுக்கு வருகிற சார்ஜ் மெமோக்களுக்குப் பதில் எழுதிக் கொடுக்கவும், விசாரணையில் தொழிலாளர் தரப்பில் ஆஜராகவுமாக இருக்கிறார். இன்னமும் இலக்கியம் வாசிக்கவும், எழுத்தாளர் வைசாகனோடு கள்ளு குடிக்கவும், கவிதைகள் பாடவும் செய்கிறார் டி.என்.வி. என் ஆசானே! என் தோழரே டி.என்.வி. உங்களோடு கழித்த அந்த நாட்களை என் நினைவிலிருந்து அழிக்கவே முடியாது. உங்களை என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தோழரே!

நன்றி – மீடியா வாய்ஸ்

4 comments:

  1. அருமையான தகவல் .. இவரைப் பற்றி நிறைய தெரிந்துக் கொண்டோம்.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம்.அவருடன் தாங்கள் பகிர்ந்து கொண்ட இலக்கியங்களை விட அவரைப்பற்றி கூறிய போராட்ட வரலாறே மந்தில் நிற்கிறது,

    ReplyDelete
  3. ஒரு பொது எதிரி வேண்டும் என்று மலையாளிகளை எதிரிகளாக சித்தரித்து அவர்களின் நல்ல பண்புகளை பற்றி நாம் அறியாமல் இருக்கிறோம் என நினைக்கிறேன்.அதில் //அநேகமாக தமிழ்மக்கள் சினிமாக்களால் மட்டுமே வளர்க்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது// இதற்கும் முக்கிய பங்கு உண்டு.மலையாளிகளுடன் சம்சாரித்த பின்னே தான் தேமதுர தமிழில் உள்ள மதுரத்தின் அர்த்தமே எனக்கு புரிந்தது.

    ReplyDelete
  4. தமிழை அரசியல் லாபத்துக்காக மட்டும் மொழியைப் பற்றிப் பேசுகிற தமிழக அரசியல்வாதிகளைப் போலவோ, மொழியைப் பற்றி எந்தப் பெருமிதமுமில்லாத தமிழ் மக்களைப் போலவோ அவர்கள் இல்லை
    அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete