Monday 7 May 2012

நாகுவின் கோல்

hockey

எங்கள் தெருவிலேயே நான் தான் முதன் முதலில் ஒரிஜினல் ஹாக்கி மட்டையுடன் விளையாடப் போனது. ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்று நினைக்கிறேன். என்னுடைய அப்பா வார்ப்பில் விட்டுப் போயிருந்த வேம்பயர் ஹாக்கி மட்டையோடு வீட்டுக்கு வந்தார். அது வரை நானும் எல்லோரையும் போல வளைந்த விறகுக்கட்டையோடு விளையாடப் போவேன். அநேகமாக ஊரிலுள்ள பெரும்பாலான பசங்க அப்படித்தான். விறகுக்கடைகளுக்குப் போய் முனையில் வளைந்த விறகுக் கட்டைகளைக் காசு கொடுத்து வாங்கவோ, வீட்டில் வாங்கும் விறகுகளில் அந்த மாதிரியான வளைவான விறகுக்கட்டையையோ தேடி எடுத்துக் கொண்டு காந்தி மைதானத்தில் கூடி விடுவோம். ஏகப்பட்ட அணிகள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும். எப்போதும் விறகுக் கட்டைகளைச் சுழற்றிக் கொண்டு பசங்க அலையிறதைப் பார்க்கிறதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்படி விளையாடிக் கொண்டிருக்கிற விறகுக் கட்டைகளுக்கு மத்தியில் நான் உண்மையான ஹாக்கி மட்டையுடன் விளையாண்டால் எப்படி இருக்கும். பசங்க மத்தியில் பெரிய மரியாதை. எனக்கும் பெருமித உணர்வு. மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. என் அப்பாவை நான் நன்றியோடு நினைத்துக் கொண்டேன்.

என் அப்பாவின் அம்மா இறந்த பிறகு அப்பா திசை தெரியாமல் காடோசெடியோன்னு அலைந்து திரிந்திருக்கிறார். கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு திரிந்தவர் எப்படியோ டாக்டர்.துரைராஜ் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து அவருடைய நன்மதிப்பைப் பெற்றதினால் அவருடைய செல்லப் பிள்ளையாகவே இருந்திருக்கிறார். அவர் தான் அப்பாவுக்கு லட்சுமி மில்லில் வேலை வாங்கிக் கொடுத்து அவரை ஒரு ஆளாகியதாக அப்பா அடிக்கடி சொல்லுவார். டாக்டர் துரைராஜுக்கு ஹாக்கி விளையாட்டின் மீது அவ்வளவு வெறி. அவ்ர் குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஹாக்கி விளையாடுவார்கள். அவருடைய தம்பி எட்வெர்டு,அவருடைய மகன் ரவி, என்று எல்லோரும் அந்த விளையாட்டின் மீதுபிரியமாக இருந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்துதான் அப்பா உடைந்து கிடந்த ஹாக்கி மட்டையை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

நாகு ஹாக்கி மட்டையை ரிப்பேர் செய்வதில் விற்பன்னன். இத்தனைக்கும் அவனிடம் ஒரு ஹாக்கி மட்டை கூடக் கிடையாது. நானும் அவனும் போய் நாலணாவுக்கு வச்சிரமும் சுற்றிக்கெட்டுவதற்கு பாவாடை நாடாவும் வாங்கிக் கொண்டு வந்தோம். எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த இருளப்பசாமி கோவில் ஒரு நந்தவனம் போல இருந்தது. அங்கே இருந்த ஒரு புளிய மரத்திற்குக் கீழே உடைந்த பானையின் பெரிய துண்டைச் சேகரித்து வந்து கற்களை வைத்து அடுப்பு மூட்டி உடைந்த பானைத் துண்டை வைத்து வச்சிரத்தை அதில் போட்டு காய்ச்சினோம். அடுப்பு எரிய குச்சிகள் பொறுக்கிக் கொடுப்பது என் வேலை. பதமாய் கிண்டிக் கிண்டிக் காய்ச்சவேண்டியது நாகுவின் வேலை. நாகு ஒவ்வொன்றையும் மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும் செய்தான். ஏதோ ஒரு புனிதமான காரியத்தைச் செய்கிற தீவிரமான முகபாவம் அவனுக்கு இருந்தது.

வச்சிரம் கொதித்துப் பாகாய் வந்ததும் உடைந்த மண்பானைச் சட்டியை இறக்கி ஒரு குச்சியில் அந்த வச்சிரத்தை எடுத்து உடைந்த ஹாக்கி மட்டையின் இரண்டு பாகங்களிலும் தடவி ரெண்டையும் பிசகாமல் இறுக்கி ஒட்ட வைத்து வாங்கி வைத்திருந்த பாவாடை நாடாவினால் சுற்றிக் கட்டி இரண்டு நாட்களுக்கு அசங்காமல் வைத்து விட்டோம். மூன்றாவது நாள் உடைந்த ஹாக்கி மட்டையை ஒட்ட வைத்திருக்கிறோம் என்று சொன்னால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி செய்து கொடுத்திருந்தான் நாகு. அதற்காக ஹாக்கி மட்டையை நாகுவுக்கு இரண்டு நாட்கள் விளையாடக் கொடுத்தேன். இந்த ஹாக்கி மட்டையினால் விளையாட்டில் என்னுடைய மதிப்பு கூடி விட்டது. எல்லோரும் என்னைத் தன்னுடைய அணியில் சேர்ப்பதில் குறியாக இருந்தார்கள். அப்போது தான் என்னுடைய ஹாக்கி மட்டையை ஆளுக்குக் கொஞ்ச நேரம் வாங்கி விளையாடிக் கொள்ளலாம் என்ற நப்பாசைதான்.

நாகு நல்ல விளையாட்டுக்காரன்.அவன் எப்போதும் நடு முன்னணி வீரனாகத் தான் களமிறங்குவான். எப்போது எங்கே இருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியாது. எதிரணியின் கண்களில் மண்ணைத் தூவுவதில் மன்னன். இங்கே இருக்கிற மாதிரி இருக்கும் பார்த்தால் கோல் போஸ்ட்டுக்கு அருகில் போய் நிற்பான். ஆள் கட்டையாக இருந்தாலும் அவனுடைய சுறுசுறுப்பு அவனை பெரிய விளையாட்டு வீரனாக்கியிருந்தது. அவன் இருக்கிற அணி எப்போதும் ஜெயித்து விடும். அதனால் எல்லோரும் அவன் இருக்கிற அணிக்குப் போவதற்கு ஆசைப்படுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தெருவுடன் போட்டி. பல போட்டிகள் சண்டையில் முடிந்து விடும். அதிலும் வடக்குத் தெரு பயல்கள் ரெம்ப முரட்டுத்தனமாக விளையாடுவார்கள். எப்போதும் கை கால்களில் சிராய்ப்புடன் அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. அப்படி இல்லாத பையன்கள் குறைவு தான்.

தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டு ஹாக்கி தான். அதுவும் குறிப்பாக கோவில்பட்டியில் ஹாக்கி விளையாடத்தெரியாத பையன்களே இருக்கமாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் ஒருவர் இருந்தாரென்றால் அவர் டாக்டர் துரைராஜ் தான். அவர் தான் கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர். அது மட்டுமல்ல. முதல் முதலாக கோவில்பட்டி ஹாக்கி கிளப் என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி அதைப் பலபோட்டிகளுக்கு அனுப்பி வைத்து ஊக்கப்படுத்தினார். அதோடு அவருடைய தொடர்ந்த முயற்சியினால் அரசும் மக்களும் சேர்ந்து நிலத்தை வாங்கி ஹாக்கி மைதானத்தை உருவாக்கினார்கள். தொடர்ந்து ஹாக்கி போட்டிகள் நடைபெற வேண்டுமென்பதற்காக அவரைக் குடும்பமருத்துவராக வைத்திருந்த கோவில்பட்டி மற்றும் கோயம்புத்தூர் லட்சுமி மில் முதலாளிகளிடம் பேசி குப்புசாமி நாயுடு அகில இந்திய ஹாக்கி மைதானமாக மாற்றினார். Dhyan_Chand_1936_semifinal

இந்த மைதானத்தில் விளையாடாத இந்திய அணிகளே கிடையாது. இந்திய ஹாக்கியின் தந்தை தயான்சந்த் விளையாடிய பெருமை இந்த மைதானத்துக்கு உண்டு. அது மட்டுமல்ல பல ஒலிம்பிக் வீரர்களுக்கு, தேசிய அணி வீரர்களுக்கு, மாநில அணி வீரர்களுக்கு, பயிற்சிக் களமாக இருந்தது. மே மாதம் வந்து விட்டால் போதும் ஊரே ஹாக்கி போட்டிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடும். போன ஆண்டு கோப்பையை யார் வாங்கினார்கள். அந்த அணிகளின் தராதரம் பற்றியெல்லாம் விமர்சனம் நடக்கும். போட்டிகள் குறித்த அறிவிப்பு வந்து விட்டால் அவ்வளவு தான். வேறு எந்த விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஹாக்கி விளையாடத் தொடங்கி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் செய்திகள் காட்டுத்தீ போல பசங்க மத்தியில பரவும்.

“ டேய் ..எம்.இ.ஜி. பெங்களூர், வந்திருச்சாம்டா..”

“ ஏர்லைன்ஸோட செமிபைனல்ல தோத்தவங்க தானடா..”

“ ஒரு தடவையாச்சும் நம்ம கோவில்பட்டி டீம் ஜெயிக்கணும்டா..”

என்று பேச்சு பேச்சு எப்போதும் ஹாக்கி பற்றியே பேச்சு. வீடுகளில் அம்மாக்களில் வசவு நாறிப்போகும்.

“ வேனா வெயில்ல ஏண்டா விறகுக்கட்டையைத் தூக்கிகிட்டு அலையிற.. ஊருல அடிக்கிற வெயில்பூராம் ஒந்தலையில தான்.. மூஞ்சியும் முகரக்கட்டையும் பாரு..”

ஆனாலும் நாங்கள் கேட்பதில்லை. ஹாக்கி போட்டிகள் தொடங்கி விட்டால் திருவிழா போல ஆகிவிடும். ஊரிலுள்ள நண்டு நசுக்கான், இளவட்டங்கள், பெரிசுகள், என்று போட்டி நடக்கும் நேரங்களில் ஊர்வலம் போல மைதானத்துக்குப் போய் வந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு மேட்ச் முடிந்ததும் ஹாக்கி வீரர்களைச் சுற்றி பசங்க கூட்டம் மொய்த்து விடும். அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவர் பின்னாலேயே போவோம். சிலர் அவர் வைத்திருக்கும் ஹாக்கி மட்டையைத் தொட்டுப் பார்த்து மகிழ்வார்கள். சிலர் துணிச்சலாய் அவருடைய ஹாக்கி மட்டையைக் கேட்பார்கள். அந்த வீரர்கள் ஹிந்தியில் கேட்கும் கேள்விகளுக்கு ஹை ஹை.. என்றோ ரூப்பு தேரா மஸ்தானா என்றோ பாடிக்காட்டுவார்கள். வீரர்கள் சிரிப்பதைப் பார்த்து ஏகக் குஷியாகி விடும். வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் தங்கும் விடுதியிலோ, பயணிகள் விடுதியிலோ கொண்டு போய் விட்ட பிறகே அவரவர் வீடுகளுக்குப் போவோம். நான் பெரியவனாகி இந்த மாதிரி ஹாக்கி விளையாட்டு வீரனாகத் தான் போக வேண்டும் என்று மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன்.

ஆனால் இன்று நிலைமயே வேறு. கிரிக்கெட் என்ற பகாசூரன் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியைக் கபளீகரம் செய்து விட்டான். அது மட்டுமல்ல இன்று சமூகத்தைப் பிடித்துள்ள கொடிய நோயான ரியல் எஸ்டேட் பிஸினஸால் ஹாக்கி மைதானமே ஸ்வாகா செய்யப் படும் நிலைமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சினால் தற்காலிகமாகக் காப்பாற்றப் பட்டிருக்கிறது. என் இளம்பருவ நினைவுகளில் இந்த குப்புசாமி நாயுடு ஹாக்கி மைதானத்தை மறக்கமுடியாது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எங்களுடைய சிறுவர் அணி, கோவில்பட்டி டவுண் ஹாக்கி கிளப் என்ற பெயரில் பெரியவர்களுக்கான ஹாக்கி போட்டிகளுக்கு முன்னால் நடைபெறும் சிறுவர்கள் ஹாக்கி போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அதில் கிடைத்த லட்சுமி மில்லின் வெள்ளைத்துணியில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு ரெம்ப நாளைக்குப் பீத்திக் கொண்டு திரிந்தது வேறு விஷயம். அன்று நாங்கள் முதல் பரிசைப் பெறுவதற்கு முக்கியக் காரணம் நாகு போட்ட கடைசி நிமிடக் கோல். அந்தக் கணத்தை இப்போது நினைத்தாலும் மனம் கிளர்ச்சியடைகிறது.

சிறுவர்கள் ஹாக்கிபோட்டியில் இறுதிப் போட்டிக்கு எங்களுடைய கோவில்பட்டி டவுண் ஹாக்கி கிளப்பும், இலுப்பையூரணி ஸ்போர்ட்ஸ் கிளப்பும் வந்து சேர்ந்தோம். இலுப்பையூரணி வலுவான டீம். எல்லோரும் ஹாக்கி மட்டையிலேயே பிராக்டீஸ் செய்ஞ்சவங்க. காலில் பூட்ஸ், சாக்ஸ், யூனிபார்ம், என்று பக்கா டீமாக இருந்தார்கள். அது மட்டுமல்ல முரட்டுத்தனமான பசங்களாகவும் இருந்தனர். இதுவரை எந்த ஒரு டீமிடமும் தோற்றதில்லை என்பது மட்டுமில்லை ஜெயித்ததும் ஒன்பது கோல் பத்து கோல் போட்டுத் தான். எங்கள் அணியில் ஆளுக்கொரு நிறத்தில் உடை. யாருக்கும் பூட்ஸ் கிடையாது. நிறையப் பேர் இந்த மேட்சுக்கு வந்தபிறகு தான் ஹாக்கி மட்டையைக் கையில் பிடித்துப் பார்க்கிறார்கள். அது வரை விறகுக் கட்டை தான். அதே போல நாங்கள் தக்கிமுக்கி ஒன்றில் ஜெயித்து, ஒன்றில் தோற்று அப்படிஇப்படியாகத் தான் இறுதிப் போட்டிக்கு வந்தோம். ஏற்கனவே இலுப்பையூரணி அணியின் விளையாட்டைப் பார்த்திருக்கிறோம். எனவே நாங்கள் கவலைப் படவில்லை. எங்களைப் போலவே இலுப்பையூரணி அணியும் ஜெயிப்பது உறுதி என்பதால் அவர்களும் கவலைப் படவில்லை.

போட்டி ஆரம்பித்த பிறகு என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. எங்கள் அணியில் அது வரை உருப்படியாக விளையாடாதவன் எல்லாம் நன்றாக விளையாடினான். அது வரை ஓடாதவன் எல்லாம் உயிரைக் கொடுத்து ஓடினான். மொத்தத்தில் எங்கள் அணி மிகச் சிறப்பாக விளையாடியது. முதலில் இலுப்பையூரணி அணி கொஞ்சம் அசால்ட்டாக விளையாடியது. பிறகு சுதாரித்துக் கொண்டு விளையாடினாலும் அந்த அணியால் கோல் எதுவும் போடமுடிய வில்லை. நேரமாக ஆக அவர்கள் முரட்டுத்தனமாக விளையாட ஆரம்பித்தார்கள். ஆறுமுகத்தின் காலில் அடித்து விட்டார்கள். விளையாட்டின் இறுதி நிமிடங்களில் பந்து எங்கள் அணியின் கைவசமே இருந்தது. என்னிடம் வந்த பந்தை நான் நாகுவிடம் பாஸ் பண்ண முயற்சிக்கும் போது என்னைக் கீழே தள்ளினான் ஒருத்தன். நான் அப்ஜெக்சன் பவுல் என்று மட்டையை உயர்த்திக் காட்டும் போது அது என்னைக் கீழே தள்ளியவனின் தலையில் பட்டு விட்டது. அவ்வளவு தான் எல்லோரும் என்னை நோக்கி ஓடி வர யாருக்குமே தெரியாமல் எப்படித்தான்பந்தைக் கடத்தினானோ நாகு கோல் போஸ்டை நோக்கிப் பறந்து விட்டான். அவர்கள் சுதாரிப்பதற்குள் கோல்கீப்பரை ஏமாற்றுவதில் கில்லாடியான நாகு மிகச் சுலபமாகக் கோலைப் போட்டு விட்டான். கோல்ல்ல்ல். ஆம் நாங்கள் ஜெயித்து விட்டோம். அந்த வருடம் எங்கள் கால்கள் தரையில் படவில்லை. எங்கள் முதுகில் சிறகுகள் முளைத்திருந்தன.

நன்றி: மீடியா வாய்ஸ்

2 comments:

  1. அருமையான நினைவுகள் - படிக்கும் பொழுது வெண்ணிலா கபடி குழுவின் ஞாபகம் வந்தது பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் ...நல்ல படங்களில் அதுவும் ஒன்று ( அதுவும் கோவில் பட்டி தான்னு நினைக்கிறன் )

    ReplyDelete
  2. உங்கள் வழக்கமான இயல்பான நடையில் ஹாக்கியின் அனுபவம் படிக்க படிக்க சுவராஷ்யமாக இருந்தது.

    ReplyDelete