Wednesday 4 April 2012

அப்பா என்றொரு மனிதர்

tears_of_sadness
அப்பா என்றொரு மனிதர்
                               கணபதிக்கு அப்பாவைப் பிடிக்கவில்லை. அப்பா என்ற சொல்லே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது. பொதுவாகவே அப்பாவை குழந்தைகளுக்கு அதுவும் ஆம்பிளைப் பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை. குடும்பத்தில் அப்பா தான் அதிகாரமையம் என்பதை வெகு சீக்கிரத்திலே குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள். அப்பா வீட்டில் இருந்தால் வீடே கையைக் கட்டி வாயைப் பொத்திக்கொண்டு கப்சிப் பென்று அமைதியாகி விடுகிறது. அம்மா ,அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, என்று எல்லோரும் கிசுகிசுப்பாய் பேசிக்கொள்கிறார்கள். எந்த நேரமாயிருந்தாலும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்பாவின் குரல் மட்டும் அந்த வீட்டில் எல்லா அறைகளுக்குள்ளும் புகுந்து புகுந்து வருகிறது. பின்னால் அம்மாவின் அடங்கிய குரல் பதவிசாக கேட்கிறது. அப்பா எப்போது வந்தாலும் வீடு அலங்கோலமாக இருப்பதையே முதலில் சொல்கிறார். எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் அப்பாவின் கண்களுக்கு ஒரு ஒழுங்கின்மை தெரிந்து விடுகிறது. உடனே அவர் சத்தம் போட ஆரம்பிக்கிறார். அம்மா ஏதோ பதில் சொல்ல வாக்குவாதம் முற்றுகிறது. அம்மாவினால் சமாளிக்க முடியாமல் போகும்போது பிள்ளைகளைப் பற்றி ஏதோ சொல்கிறாள். உடனே அப்பாவின் கோபம் பிள்ளைகளின் மீது திரும்புகிறது. கோபத்தின் ஃபாரன்ஹீட்டைப் பொறுத்து சில நேரம் அடிகள், சிலநேரம் வசவுகள், சில நேரம் முறைப்புகள், என்று கோபம் கடைகாலில் ஓடி மறைந்து விடுகிறது. அப்பா வந்தது முதல் பிள்ளைகளுக்கு ஒரு பதட்டம் வந்து விடுகிறது. எப்போதாவது அப்பாவும் சிரிப்பதுண்டு. ரெம்ப அபூர்வமான தருணங்களாக அது இருக்கும்.
எனவே சின்னஞ்சிறு வயதிலேயே குழந்தைகள் அப்பா என்ற பிரதிமையைப் பற்றி சில கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆதலால் அப்பாவைப் பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை என்று நினைத்தேன். ஆனால் கணபதி அப்படியில்லை. அவனுக்கு அப்பா ஒரு பிசாசு. பேய். பூதம். கொடூரன். அவன் சொல்வதைக் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.
நான் கணபதியைச் சந்தித்தது சென்னையில். வேலை தேடிச் சுற்றிக் கொண்டிருந்த காலங்களில் சென்னையிலும் சில நாட்கள் தங்கியிருந்து என்னுடைய அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன். மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்த ஒரு மேன்சனில் நான் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் தான் கணபதி தங்கியிருந்தான். இத்தனைக்கும் அவன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. காலையில் எல்லோருக்கும் முன்னால் குளித்து முடித்து கையில் பயோடேட்டா ஃபைலுடன் வெளியேறி விடுவான். இரவு எல்லோரும் வந்து கூடடைந்த பிறகே வருவான். அறைக்குள் சென்ற அரைமணி நேரத்திற்குள் அவனுடைய குரல் கேட்கத் தொடங்கும். அவனுடைய அப்பாவைப் வையத் தொடங்குவான். குறைந்தது ஒரு மணி நேரமாவது அவனுடைய குரல் உச்சஸ்தாயியில் கேட்கும்.மேன்சனில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல எல்லோரும் நடந்து கொள்வார்கள்.  அந்தக் குரலின் துயரம் என்னைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும். எனக்கு உறக்கம் வராது. இத்தனைக்கும் அவனுடைய அப்பா இங்கிருந்து வெகுதூரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறார். அவன் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதைப் போலவே இருக்கும். அவன் பேசிய வார்த்தைகள் வழியே அவனுடைய அப்பாவை நான் உருவகித்துக் கொண்டேன். உண்மையில் அது கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்தது.
ஆசிரியராக இருந்த அவனுடைய அப்பாவுக்கு பையனை கலெக்டர் ஆக்குவது ஒன்றே லட்சியம். அதனால் அவருடைய முழுக் கவனமும் கணபதி மேலே மட்டும் தான் இருந்தது. அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கை களையும் அவர் ஒழுங்கு படுத்தினார். அவன் எப்படி வாழ வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். காலையில் எந்திக்கிற நேரம், பல் துலக்கும் முறை, ஆய் போகிற நேரம், சாப்பிடுகிற உணவு, உடற்பயிற்சி,படிப்பு, பொதுஅறிவு, என்று எல்லாவற்றையும் அவரே தீர்மானித்தார். அவன் அவருடைய கட்டளைகளை ஏற்று செயல்படுத்துகிற ரோபோ மாதிரி தான் இருந்திருக்கிறான். கலகம் செய்யவோ, எதிர்க்குரல் கொடுக்கவோ வழியற்று உழன்று கொண்டிருந்திருக்கிறான் கணபதி. எப்போதாவது அவனுக்கு எதிர்ப்புணர்வு தோன்றும். ஆனால் அதற்கான விளைவு மிகக் கடுமையாக இருக்கும். அவர் அவனைத் தண்டிக்க மாட்டார். தன்னைத் தானே தண்டித்துக் கொ ள்வார். அதன் மூலம் அவனை வசக்குகிற வித்தையைக் கற்றிருந்தார். விசித்திரமான அப்பா!
அப்பாக்களே விசித்திரமானவர்கள் தானோ என்னவோ. எல்லோருடைய வாழ்விலும் அப்பாவுக்கென்று தனித்த ஒரு இடம் உண்டு. நல்லதும் கெட்டதுமாக அப்பாவினால் பாதிப்படையாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். பிஞ்சிளம் பருவத்தில் அப்பா என்கிற படிமம் மனதில் ஏற்படுத்திய ஆதர்சம், அப்பாவின் விரல் பிடித்து அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நடந்த பரவச உணர்வு. அப்பாவின் சட்டை, அப்பாவின் செருப்பு, அப்பாவின் பேனா, அப்பாவின் புத்தகம், என்று அப்பாவின் உலகமே அற்புதமாகத் தோன்றும். இளம் வயதில் சாகச நாயகனாகத் தெரியும் அப்பா குழந்தை வளர, வளர, மேக்கப் கலைந்த கோமாளியாகத் தோன்றுவதும், வில்லனாக மாறுவதும் நடக்கும்.அப்பாவின் கண்டிப்பும், அலட்சியமும், அங்கீகரிக்க மறுக்கும் அப்பாத் தனமும், உலகிலேயே மிக மோசமான ஆள் தன்னுடைய அப்பா தான் என்றும் தோன்றும் கலைடாஸ்கோப்பின் ஒரு சிறுகோணமாற்றத்தில் விசித்திரமான தோற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறதே.
என்னுடைய அப்பா மிகவும் அமைதியானவராக இருந்தார். நாங்கள் எந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம் என்று கூடத் தெரியுமா என்பது சந்தேகம் தான். நாங்களும் அவரைத் தொந்திரவு செய்ததில்லை. மில்லில் இரவு பகலாக மாறி மாறி ஷிப்டு பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து உறங்கிக் கொண்டிருப்பார். பெரும்பாலும் என் அப்பாவைப் பற்றி யோசிக்கும் போது அவர் உறங்கிக் கொண்டிருக்கும் சித்திரமே என் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் கணபதி பாவம்.
கல்லூரி வரை பொறுத்துப் போயிருக்கிறான் கணபதி. அதன்பிறகு அவனால் முடியவில்லை. வீட்டை விட்டு ஓடி வந்து விட்டான். அவனுடைய அப்பாவும் விடவில்லை. தேடிப்பிடித்து வந்திருக்கிறார். கணபதி பழைய கணபதியாக இல்லை. அப்பாவின் சுயதண்டனை வித்தையை அவரிமே காட்டினான். நான்கு நாட்களாக சாப்பிடாமல் கிடந்து மருத்துவமனைக்குக் கொண்டு போகிற நிலைமைக்கு ஆகி விட்டது. அப்பா தன் முயற்சியில் தோற்றுப்போய் ஊர் திரும்பி விட்டார். இப்போதும் மாதாமாதம் அவர் தான் பணம் அனுப்புகிறார்.
கணபதிக்குப் பிரமை. எப்போதும் அப்பா அவன் கூடவே இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். அவன் என்ன செய்தாலும் அவன் அருகில் இருந்து கொண்டு அவனுக்கு ஆலோசனைகள் சொல்லிக் கொண்டோ, அறிவுரைகள் சொல்லிக்கொண்டோ, திருத்தங்கள் சொல்லிக்கொண்டோ இருந்தார். அது மட்டுமல்ல அவனைத் திட்டிக் கொண்டுமிருந்தார். அவனால் அப்பாவை விரட்டமுடிய வில்லை. அவருடைய கூர்மையான இடுங்கிய கண்களின் பார்வையிலிருந்து தப்பமுடியவில்லை. அவனுக்கென்று எந்த அந்தரங்கத்தையும் ரகசியமாய் பாதுகாக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் அப்பா நீக்கமற நிறைந்திருந்தார். அவன் அப்பாவை விரட்ட மது அருந்த ஆரம்பித்தான். மது அருந்தியவுடன் அருள் வந்தவன் போல ஆவேசமாகி அப்பாவைத் திட்ட ஆரம்பிப்பான். எதிரிலிருக்கும் அப்பாவை விரட்ட என்னென்னவோ செய்து பார்த்தான். முடியவில்லை.
பல சமயங்களில் நான் அவனிடம் பேசியிருக்கிறேன். எந்த வித்தியாசமும் இல்லாமல் ரெம்ப சாதுவாய் பேசுவான். இரவில் குரலாய் கேட்கிற கணபதிக்கும் நேரில் பார்க்கிற கணபதிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. கேட்கிற கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லுவான். அவனாகப் பேசாத ஒரு விசயத்தைப் பற்றி நாமாகப் பேசுதல் முறையன்று என்ற நயத்தகு நாகரீகத்தினால் நான் மட்டுமல்ல, மேன்சனில் உள்ள மற்றவர்களும் பேசவில்லை. அவனுடைய முகம் நாளுக்கு நாள் கருத்துச்சுருங்கிப் போய்க் கொண்டிருந்தது.
சென்னையில் நான் வேலை தேடி அலைந்ததை விட இலக்கியநண்பர்களைச் சந்திப்பதும் இலக்கியக் கூட்டங்களுக்குப் போவதும் தான் அதிகமாக நடந்தது. கோவில்பட்டியிலிருந்து அங்கு முன்னத்திஆளாகப் போயிருந்த துரையண்ணனும், எழுத்தாளர் விமலாதித்தமாமல்லனும் தான் எனக்குச் சேக்காளிகள். விமலாதித்தமாமல்லனின் சைக்கிளில் முன்னால் ஹேண்ட் பாரில் உட்கார்ந்து கொண்டு சென்னையை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்படியே நாட்கள் கழிந்துபோய் விடும் என்று வெள்ளந்தியாய் நினைத்திருந்தேன்.
அன்று விமலாதித்தமாமல்லனுடன் ஒரு நாடக நிகழ்ச்சிக்குப் போய் விட்டு கொஞ்சம் காலதாமதமாக மேன்சனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்துக்கு எப்போதும் அமைதியாகி விடுகிற மேன்சன் பரபரப்பாக இருந்தது. எல்லோரும் அவரவர் அறை வாசலில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு கணபதியைப் பற்றித்தான். எனக்கு ஏதோ விபரீதம் நடந்திருக்குமோ என்ற பதட்டம் உருவாகி படபடப்பாக இருந்தது.  கணபதியின் அறை வாசலில் நான்கு பேர் நின்று கொண்டு உள்ளேயிருந்த கணபதியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும், நான் கேட்காமலேயே இன்னொரு அறைக்காரரான ரவி,
” நான் மட்டும் பாக்கலென்னா ஐயா இன்னேரம் ஆடிக்கிட்டிருப்பாக. எப்பவும் திரும்பிப் பாக்க மாட்டேன்.. அவன் நல்ல நேரம் கதவு ஓரம் பாக்கேன்.. ஃபேன்ல கயித்தைக் கட்டி மேசை மேல ஏறிக்கிட்டிருக்கான் பக்கத்தில சர்மா சாரையும் கூட்டிட்டு வந்து பயல சத்தம் போட்டு உட்கார வைச்சிருக்கு.. கொஞ்சம் கவனிக்கலன்னா ஆள் காலி.. “
நான் கணபதியின் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். கணபதி முட்டங்கால்களைக் கட்டிக் கொண்டு தலையைக் குனிந்த படி உட்கார்ந்திருந்தான். யார் பேசியதும் அவன் காதில் ஏறியதா என்று சந்தேகம் தான். வாய் மட்டும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது. எனக்கு முதல் முறையாக கணபதியின் அப்பாமீது கோபம் வந்தது.
ரவி தான் மறுபடியும்
,” சார் நீங்க தான் எழுத்தாளராச்சே..நல்ல கரு கிடைச்சுதேன்னு சந்தோசப்படுவீங்க.. மூணு நாளைக்கு முன்னாடி இவன் அவனோட அப்பாவுக்கு ஒரு லெட்டர் வேற எழுதியிருக்கான்..சார்.. இந்த லெட்டர் உங்க கையில கிடைக்கிற போது நான் தற்கொலை செய்து இறந்து போயிருப்பேன்னு எழுதியிருக்கான்..சார்..”
என்று சொன்னார்.
எனக்கு இதைக் கேட்டதும் கணபதி மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ன முட்டாள்தனம்? அவன் வீட்டில் இந்நேரம் என்ன பாடு பட்டுக் கொண்டிருப்பார்களோ? அப்போது கீழே கணபதியின் பெயரைச் சொல்லி யாரோ அழைப்பதைப் போலிருந்தது. கீழே போன சர்மா சிறிது நேரத்தில் கையில் ஒரு தந்தியுடன் வந்தார்.
“ கணபதியின் கடிதம் படித்த அடுத்த கணம் மாரடைப்பினால் அவனுடைய அப்பா மரணமடைந்துவிட்டார்.”
யாராலும் தேற்றமுடியாதபடி கணபதி அழுது கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment