Wednesday, 14 March 2018

பேய் பிசாசு இருக்கா?

நேற்றைய தினமலர் பட்டம் இணைப்பிதழில் பேய் பிசாசு இருக்கா? என்ற நூலிலிருந்து சில பகுதிகள்......

Sunday, 4 March 2018

ஆமையும் முயலும்


ஆமையும் முயலும்

உதயசங்கர்

ஒரு குளத்தில் ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக்குளத்தில் நீர் வற்றிக் கொண்டிருந்தது. புல், பூண்டுகள், பாசி, சிறிய மீன்கள், புழுக்கள், பூச்சிகள், எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஆமைக்குத் தீனி கிடைக்கவில்லை. ஆமை வேறு நீர்நிலையை நோக்கிப் போகவேண்டும் என்று நினைத்தது.
அதிகாலை ஆமை அந்தக் குளத்தை விட்டு மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தது. ச்சர்ர்ரக்…… ச்சர்ர்ரக்…. என்ற சத்தத்துடன் மெல்ல நடந்தது. அப்போது ஒரு புதரில் இருந்து திடீர் என்று ஒரு முயல் பாய்ந்து ஆமையின் முன்னால் வந்து நின்றது.
“ வர்றியா ஓட்டப்பந்தயம் ஓடலாம்.. போன தடவை நான் கொஞ்சம் ஏமாந்துட்டேன்.. இந்த முறை விட மாட்டேன்..”
என்று முயல் தன் நீண்ட காதுகளை விடைத்தபடி பேசியது. அதைக் கேட்ட ஆமை சிரித்துக் கொண்டே,
“ இல்லை நண்பா… நான் வரவில்லை.. நான் வேறு குளத்தைத் தேடிப் போகிறேன்.. இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டுமோ தெரியவில்லை..” என்று பதில் சொல்லியது.
“ போடா பயந்தாங்குளி… நீ இப்படி நடந்து எப்படிக் கண்டுபிடிப்பே.. என்னை மாதிரி நாலு கால்ல ஓடணும்… சும்மா சளக்கு சளக்குன்னு அன்னநடை நடந்துக்கிட்டிருக்கே…. இதிலே முதுகிலே சுமை வேற சுமந்துக்கிட்டிருக்கே…. அதைக் கழட்டிப்போடு.. எல்லாம் சரியாயிரும்..”
என்று சொல்லிக்கொண்டே பாய்ந்து குதித்துச் சென்று விட்டது.
ஆமையும் ஒரு கணம் யோசித்தது. முதுகில் உள்ள ஓடு இல்லை என்றால் இன்னும் வேகமாகப் போகலாம். முயல் சொன்னது சரிதான். ச்சே… என்ன கனம்! ஆமை முதுகை உதறியது. ஓடு கீழே விழவில்லை. வருத்தத்துடன் மெல்ல ச்சர்ரக்…. ச்சர்ரக்.. என்று நடந்து போய்க் கொண்டிருந்தது.
ஆமை கொஞ்சதூரம் தான் போயிருக்கும். எதிரே முயல் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தது. அதன் உடல் நடுங்கியது.
“ ஆபத்து.. ஆபத்து.. நரி துரத்துது… ஓடு..ஓடு… “  என்று முயல் கத்திக் கொண்டே தலைதெறிக்க ஓடியது. ஆமை நிமிர்ந்து பார்த்தது. கொஞ்சதூரத்தில் செவலை நிற நரி ஒன்று பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ஆமை மெல்ல தன்னுடைய கால்களையும் தலையையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.
வேகமாக ஓடி வந்த நரி, ஆமையின் அருகில் வந்தது. அதை முகர்ந்து பார்த்தது. ஓட்டின் மீது வாயை வைத்து கடித்தது. கடிக்க முடியவில்லை. ஓடு கடினமாக இருந்தது. நரி தன்னுடைய மூக்கினால் ஆமையைத் தள்ளயது. ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த ஆமையை அசைக்க முடியவில்லை. ஆமையை இரண்டு முறை சுற்றிச் சுற்றி வந்தது நரி.
நரி பின்பு வந்த வழியே திரும்பிச் சென்றது.
நரி போன பிறகு ஓட்டிலிருந்து கால்களையும் தலையையும் வெளியே நீட்டியது ஆமை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஓட்டை உதறிவிட நினைத்தேனே என்று தன்னை நினைத்து வெட்கப்பட்டது.
இயற்கையன்னைக்கு நன்றி சொல்லியது.

நன்றி - வண்ணக்கதிர்


Wednesday, 21 February 2018

யானையும் பூனையும்

யானையும் பூனையும்

உதயசங்கர்காட்டில் இருந்த யானையாருக்குத் திடீர் என்று பெரிய கவலை வந்து விட்டது. யானையார் மிகவும் குண்டாக இருந்ததால் சந்து பொந்துகளில் நுழைய முடியவில்லை. பெரிய வயிறு இருப்பதால் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சட்டென ஒரு இடத்தில் உட்காரவோ எழுந்திரிக்கவோ முடியவில்லை. நின்று கொண்டே தூங்க வேண்டும். ச்சே..என்ன வாழ்க்கை! என்று யோசித்தது.
அப்போது யானையாருக்கு முன்னால் ஒரு பூனையார் ஒய்யாரமாக நடந்து போனார். அப்படி நடந்து போகும்போது ஓரக்கண்ணால் யானையாரைப் பார்த்துக் கொண்டே போனார். ஒல்லியாக இருந்த பூனையாரைப் பார்த்த யானையார் பெருமூச்சு விட்டார்.
இந்தப் பூனையாரை மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
அங்கே பூனையாரும் பெருமூச்சு விட்டார். யானையாரைப் பாரு. ஒரு கவலை இல்லை. அவர் நடந்து வந்தாலே காடே அதிரும்ல. எல்லோரும் அவரைப் பார்த்து பயந்தார்கள். அவருக்கு உணவு எளிதாகக் கிடைக்கிறது. எங்கும் இலை தழைகள் தானே. நம்ம நிலைமை பதுங்கிப் பதுங்கி இரை தேடணும். பெரிய மிருகங்களைப் பார்த்தால் ஓடி ஒளியணும். ச்சே.. என்ன வாழ்க்கை! என்று யோசித்தது.
இரண்டு பேரும் இரவு உறங்கினார்கள். விடிந்தது. கண்விழித்துப் பார்த்தால்……………
யானையார் பூனையாரைப்போல ஒல்லியாக, சின்னதாக, மாறி விட்டார்.
பூனையார் யானையாரைப் போல பெரிதாக, குண்டாக மாறிவிட்டார்.
ஆகா! என்ன அற்புதம்! நினைத்த மாதிரி நடந்து விட்டதே என்று யானையாரும் பூனையாரும் ஆச்சரியப்பட்டனர்.
பூனையாக மாறிய யானையார் காட்டுக்குள் சந்து பொந்துகளுக்குள் பாய்ந்து ஓடினார். தன்னுடைய சிறிய தும்பிக்கையினால் தரையில் வளர்ந்திருந்த புற்களையும், சிறிய செடிகளையும் இழுத்தார். முடியவில்லை. பலம் இல்லாமல் பொதுக்கடீர் என்று மட்டமல்லாக்க விழுந்தார். அவருக்கு எதிரே வந்த சிங்கம், புலி, மான், மிளா, ஓநாய், நரி, ஏன் எலி கூட பயப்படவில்லை. எல்லோரும் யானையாரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். புலியார் உறுமிக்கொண்டே பூனையாக மாறிய யானையாரைப்பார்த்து ஓடிவந்தார். அதைப்பார்த்த பூனையாக மாறிய யானையார் உயிரைக்காப்பாற்ற தலை குப்புற விழுந்து எழுந்து ஓடினார். எப்படி கம்பீரமாக இருந்தோம். இப்படி பயந்து ஓடும்படி ஆகி விட்டதே! ச்சே.. என்ன வாழ்க்கை என்று நினைத்தது.
யானையாக மாறிய பூனையாரைப் பார்த்த சிங்கம், புலி, மான், மிளா, ஓநாய், நரி, ஏன் எலி கூட அலட்சியமாக எதிரே வந்தன. அதைப் பார்த்த யானையாக மாறிய பூனையாருக்குக் கோபம் வந்தது.
நான் யானையாக மாறிய பூனையார். ஜாக்கிரதை!
என்று அவர்களை எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தார்.
 தன்னுடைய மீசை முடி சிலிர்க்க தன்னுடைய பெரிய வாயைத்திறந்து ” மியாவ்.. மியாவ்.. மியாவ்..” என்று கத்தியது. அதைக் கேட்ட எல்லா விலங்குகளும் சிரித்தன.
யானையாக மாறிய பூனையாருக்கு அவமானமாகி விட்டது. ஓடி ஒளிந்து கொள்ள நினைத்தது. அவ்வளவு பெரிய உடம்பைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓட முடியவில்லை. ஒரு புதருக்குள் ஒளிந்து கொள்ள முடியவில்லை. எங்கே நின்றாலும் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. குனிந்து இரையைப் பிடிக்க முடியவில்லை. எல்லாம் அந்த ஓட்டம் ஓடுகின்றன. ச்சே. என்ன வாழ்க்கை! என்று நினைத்தது.
பூனையாக மாறிய யானை
யானையாக மாறி விட்டது.
யானையாக மாறிய பூனை
பூனையாக மாறி விட்டது.
     யானை யானையானது.

     பூனை பூனையானது.
நன்றி- மாயாபஜார்

Tuesday, 23 January 2018

குளத்தில் சத்தம்

குளத்தில் சத்தம்

உதயசங்கர்

நல்ல மழை. அல்லிக்குளம் நிரம்பி வழிந்தது. அல்லிக்குளத்தில் நிறைய அல்லி மலர்கள் பூத்திருந்தன. அல்லி மலர்கள் அல்லிக்குளத்தின் கரையோரம் கொக்கு, நாரை, உள்ளான், பறவைகள் தண்ணீரில் அசையாமல் நின்று கொண்டிருந்தன. சிறுமீன்களோ, தலைப்பிரட்டான்களோ, புழு, பூச்சிகளோ, அந்தப்பக்கம் வந்தால் லபக் என்று வயிற்றுக்குள்ளே தள்ளிவிடத் தயாராக நின்று கொண்டிருந்தன. கவனமாய் தண்ணீருக்குள்ளேயே பார்த்துக்கொண்டு நின்றன.
சிலசமயம் அல்லிமலர்கள் மீதோ, அல்லி இலைகள் மீதோ உள்ளானும், நாரையும், கொக்கும், நடந்து சென்று இரை தேடின. நீர்க்காகம், குளத்தில் நீந்தியது. அவ்வப்போது தலையைக் குனிந்து தண்ணீருக்குள் குட்டிக்கரணம் போட்டு இரை தேடியது.
குளத்தில் அயிரை, கெண்டை, கெளுத்தி, உளுவை, மீன்களும் ஏராளமான தவளைகளும், தலைப்பிரட்டான்களும், நீந்திக்கொண்டிருந்தன. பகல் முழுவதும் தவளைகளின் சத்தம் காதைப்பிளந்தது. குளத்தின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு விதமான சத்தம் வந்து கொண்டிருந்தது.
குளத்தின் கரையில் கூட்டம் கூட்டமாக தவளைகள் கூடிப் பேசிக்கொண்டிருந்தன. ஒரு குட்டித்தவளை மட்டும் அங்கும் இங்கும் தாவிக்குதித்துக் கொண்டே இருந்தது. அங்கே இருந்த வயதான தவளைகள், பெரிய தவளைகள், இளம் தவளைகள், குட்டித்தவளைகள், என்று எல்லோரிடமும் போய் மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! என்று கத்தியது. அந்தக்குட்டித்தவளையின் உற்சாகத்தைப் பார்த்து மற்ற தவளைகளும் ஒன்று போல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தின.
அந்த சத்தத்தைக் கேட்டு கொக்குகளும், நாரைகளும், உள்ளான்களும், நீர்க்காகங்களும் ஒரு நொடி திகைத்து நின்றன. பின்னர் அவைகளும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தின. அந்த சத்தத்தைக் கேட்டு அல்லி மலர்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தலையாட்டின. அல்லி மலர்கள் தலையாட்டுவதைப் பார்த்து குளத்தைச் சுற்றி நின்ற தென்னை மரம், மாமரம், வாகை மரம், புங்கை மரம், வேப்பமரம், எல்லாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தலையாட்டின. மரங்கள் தலையாட்டியதும் உண்டான காற்றும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று பாடியது. காற்றின் பாடலைக் கேட்டு மேகங்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று சிரித்தன. எங்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி!
அப்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சத்தம் கேட்டது. ஒரு சாரைப்பாம்பு கரையோரம் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. சாரைப்பாம்பின் சத்தம் கேட்டு மீன்கள் தண்ணீரின் ஆழத்துக்குப் போய் விட்டன. தவளைகள், சகதிக்குள் புதைந்து கொண்டன. குட்டித்தவளை மட்டும் இன்னமும் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று குதித்துக்கொண்டிருந்தது.
அப்படி ஒரு குதி!
நேரே சாரைப்பாம்பின் முன்னால் போய் குதித்தது.. சாரைப்பாம்பு குட்டித்தவளையை உற்றுப் பார்த்தது. குட்டித்தவளை ஒரு கணம் கண்களை மூடித் திறந்தது. பிறகு சாரைப்பாம்பை தைரியமாகப் பார்த்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தியது.
சாரைப்பாம்பு ஒரு நொடி நின்றது. தன்னுடைய பெரிய வாயைத்திறந்தது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தியது. அது திரும்பிப் பார்ப்பதற்குள் குட்டித்தவளை குபீர் என்று குளத்துக்குள் பாய்ந்தது.
அவ்வளவு தான்!

Friday, 19 January 2018

பயத்துக்கு விடுதலை

பயத்துக்கு விடுதலை

உதயசங்கர்

ஊரிலேயே பெரிய தொலைதொடர்பு கோபுரத்தில் ஒரு பருந்து கூடு கட்டியிருந்தது. கூட்டில் இரண்டு பருந்துக்குஞ்சுகள் இருந்தன. நாள்முழுவதும் தாய்ப்பருந்து இரை தேடி இரண்டு பருந்துக்குஞ்சுகளுக்கும் ஊட்டி விட்டது. இரண்டு பருந்துக்குஞ்சுகளும் எதையும் வேண்டாம் என்று சொல்லாமல் நன்றாகச் சாப்பிட்டன. இப்போது அந்தக்குஞ்சுகள் நன்றாக வளர்ந்து விட்டன. இறகுகள் முளைத்து சிறகுகள் வளர்ந்து அழகாக இருந்தன.
தாய்ப்பருந்து குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்தது. மெல்ல தன்னுடைய மூக்கினால் ஒரு பருந்துக்குஞ்சை தள்ளிக் கூட்டின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. அந்தப் பருந்துக்குஞ்சு கூட்டிலிருந்து தானாகவே கீழே விழுந்தது. நேரே கீழே போய்க்கொண்டிருந்த குஞ்சின் சிறகுகள் தானாகவே மேலும் கீழும் அடிக்க ஆரம்பித்தன. பருந்துக்குஞ்சு இப்போது பறக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால் இன்னொரு பருந்துக்குஞ்சு கூட்டிலேயே பயந்து நடுங்கியது. கீழே எட்டிப்பார்க்கும். உடனே ஓடி கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொள்ளும். தாய்ப்பருந்து உள்ளே இருந்து பருந்துக்குஞ்சை மூக்கினால் தள்ளும். பருந்துக்குஞ்சோ அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து கொள்ளும். தாய்ப்பருந்து ..பயப்படாதே.. நீ கீழே இறங்கினால் பறந்து விடலாம். கூட்டிலேயே இருக்க முடியாது. பருந்து என்றால் பறக்க வேண்டும். பறந்து பார். பறத்தல் இனிது. பறத்தல் அழகு என்று உற்சாகப்படுத்தியது.
பருந்துக்குஞ்சு அம்மாவிடம் அம்மா எனக்குப் பயம்மா இருக்கும்மா. இவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும்? நான் கூட்டிலேயே இருக்கேன். நீ சாப்பாடு கொண்டு வந்து கொடு. என்றது.
தாய்ப்பருந்து கவலையுடன் பருந்துக்குஞ்சைப் பார்த்தது. சரி இரண்டு நாட்கள் போகட்டும் என்று விட்டு விட்டது.
பருந்துக்குஞ்சுக்குப் பயம் போகவில்லை.
அன்று காலை விடிந்தது. தாய்ப்பருந்து பருந்துக்குஞ்சை தன் மூக்கினால் தள்ளியது. பருந்துக்குஞ்சு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தது. தாய்ப்பருந்து தன் அலகினால் செல்லமாய் ஒரு தட்டு தட்டியது. பின்பு வேகமாக கூட்டிலிருந்து பருந்துக்குஞ்சைத் தள்ளியே விட்டது.
ஐயோ அம்மா என்று கத்தியபடியே கீழே வேகமாக விழுந்து கொண்டிருந்தது பருந்துக்குஞ்சு. திடீர் என்று அதன் சிறகுகள் அசைய ஆரம்பித்தன. காற்றில் சிறகுகளை விரித்து மிதந்தது. ஆகா! எவ்வளவு அழகு! பறத்தல் இத்தனை இனிமையா! இதற்காகவா பயந்து நடுங்கினோம். என்று வெட்கப்பட்டது. இப்போது பருந்துக்குஞ்சின் பயம் போயே போய் விட்டது.
தாய்ப்பருந்துடன் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பருந்துக்குஞ்சுகளும் அதோ பறந்து கொண்டிருக்கின்றன.
பாருங்கள்!

 5+

Wednesday, 17 January 2018

யார் அழகு?

யார் அழகு?

உதயசங்கர்

அன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், மரப்பல்லி, அணில், எலி, சாரைப்பாம்பு, நல்லபாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், பச்சைபாம்பு, மஞ்சள்விரியன், மண்ணுள்ளி பாம்பு, புறா, காட்டுக்கோழி, கௌதாரி, காடை, மைனா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, நீலச்சிட்டு, தேன்சிட்டு, மயில், கருங்குயில், புள்ளிக்குயில், என்று எல்லோரும் ஒன்று கூடுவார்கள். வருடத்துக்கு ஒரு முறை இயற்கையைப் போற்றி வழிபடுவார்கள்.
அந்த விழாவின் போது அங்கே கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம், ஓட்டப்பந்தயம், சடுகுடு, பாண்டி, கிளித்தட்டு, என்று எல்லாவிதமான நிகழ்ச்சிகளும் நடக்கும். அன்று முழுவதும் யாரும் யாருடனும் சண்டை போடக்கூடாது. யாரும் யாருக்கும் எதிரி இல்லை.
பாட்டுப்போட்டியில் குயிலும், கிளியும், மைனாவும், போட்டி போட்டனர். குயில் ” குக்கூ குக்கூகுக்கூக்கூஊஊ “ என்று பாடிக்கொண்டிருந்தது.
கிளி “ கீகிகிகிகிக்கீக்கீக்கீ..” என்று கத்திக் கொண்டிருந்தது.
மைனா,” கெக்கேக்கெக்க்கே..” என்று ராகம் பாடியது.
நடுவராக இருந்த ஆந்தை தூக்கக்கலக்கத்தில் கண்ணை மூடி மூடித் திறந்து தலையாட்டிக் கொண்டிருந்தது. ஆந்தையாரின் தலையாட்டலைப் பார்த்து குயிலும் கிளியும், மைனாவும், இன்னும் சத்தமாகப் பாட ஆரம்பித்தன.
நடனப்போட்டிக்கு நடுவராக நத்தை இருக்க, மயிலும், கோழியும், புறாவும், ஆடின.
“ ஏன் இப்படி கையையும் காலையும் உதறிக் கொண்டிருக்கிறார்கள்?”
என்று நடுவர் நத்தை நினைத்தது. இப்படி காட்டின் பல பாகங்களிலும் வேறு வேறு போட்டிகள் நடந்து கொண்டிருந்தன.
காட்டின் நடுவே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அழகுப்போட்டியின் நடுவராக பருந்து உட்கார்ந்திருந்தது.
அழகுப்போட்டியில் ஆண்மயில் தன் தோகை விரித்து ஒய்யாரமாக நடந்து வந்தது.
மயில்புறா தலையில் கொண்டையும் பின்புறம் விரிந்த இறகுகளுமாய் நடந்து வந்தது.
சிட்டுக்குருவி தத்தித்தத்தி நடந்து வந்தது.
கிளி தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு ஒவ்வொரு அடியாய் அடியெடுத்து நடந்து வந்தது.
ஒவ்வொருவர் நடந்து வரும்போதும் கைதட்டலும் சீட்டி ஒலியும் ஆரவாரமும் தூள் பறந்தது.
ஆமை அன்னநடை போட்டு வந்தது.
நத்தை தன்னுடைய சங்குமுதுகை ஆட்டிக் கொண்டே வந்தது.
முயல் நீண்ட காதுகளை ஆட்டிக் கொண்டே துள்ளித் துள்ளி வந்தது.
நரி வாலை சுருட்டிக் கொண்டே பம்மிப் பம்மி வந்தது.
பாம்பு தலையைத்தூக்கி தன் படத்தைக் காட்டிக் கொண்டே வந்தது.
அணில் தன்னுடைய சாமரவாலைத் தூக்கிக்கொண்டு விருட்டென்று ஓடியது.
காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்து எல்லோரையும் பார்த்தபடி நடந்தது.
ஓணான் தன்னுடைய இரண்டு கண்களையும் உருட்டியபடி தலையை ஆட்டிக்கொண்டே நடந்தது.
எறும்பு யாரையும் கவனிக்காமல் விறுவிறுவென்று நடந்தது.
அழகுப்போட்டியின் முடிவு அறிவிக்கும் நேரம் வந்தது.
நடுவராக இருந்த பருந்து நீண்ட தன் சிறகுகளை விரித்து மடக்கியது. பின்னர் அலகுகளால் இறகுகளைக் கோதி விட்டது. எல்லோரும் காத்திருந்தனர். பின்னர் மேடையில் அதுவே ஒரு நடை நடந்து பார்த்தது.
கரகரப்பும் கீச்சுத்தன்மையும் கலந்த குரலில் தன்னுடைய தீர்ப்பை அறிவித்தது.
” அழகுப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே அழகு. கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவர்களும் அழகு. இயற்கையின் படைப்பில் எல்லோருமே அழகு. “
உண்மை தானே!
காட்டில் ஒரே ஆரவாரம்!. கைத்தட்டல்!. சீட்டி ஒலி!.
5+Monday, 15 January 2018

கோழியின் எச்சரிக்கை

கோழியின் எச்சரிக்கை

உதயசங்கர்

செவலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது. அந்த பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாட்கள் அடைகாத்தது. இருபத்தியொராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக் கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தன. மூன்று முட்டைகள் அப்படியே இருந்தன. செவலைக்கோழி அந்த முட்டைகளை உருட்டிப்பார்த்தது. ஒன்றும் அசையவில்லை. அந்த முட்டைகளை அடைகாத்த கூட்டிலிருந்து தள்ளி விட்டது. அந்த மூன்று முட்டைகளும் கூமுட்டைகள்.
செவலைக்கோழி உண்ணாமல் உறங்காமல் அடைகாத்து பொரித்த அந்த ஏழு குஞ்சுகளையும் பெருமையுடன் பார்த்தது.
ஒரு குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு செவலை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு கருப்பு நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு கருப்பில் வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு வெள்ளையில் கருப்புப்புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு சாம்பல் நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு செவலையும் கருப்பும் கலந்து இருந்தது.
எல்லாக்குஞ்சுகளும் கிய்யா..கிய்யா…கிய்யா…கிய்யா.. என்று போல குரல் எழுப்பிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.
தாய்க்கோழி ” கெக்கெக்கெக் எல்லோரும் வாங்க “ என்று கேறியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் தாய்க்கோழியின் அருகில் வந்து நின்றன. ஆனால் சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் வரவில்லை. அந்தக்குஞ்சு அப்படியே உலாத்திக் கொண்டிருந்தது. தாய்க்கோழிக்குக் கோபம். உடனே கொஞ்சம் சத்தமாய், ” க்ர்ர்ர்ர்ர் எனக்குக் கோபம் வந்துருச்சி.. உடனே வா..” என்று கத்தியது.
தாய்க்கோழியிடம் இருந்து விலகியிருந்த சாம்பல் நிறக்குஞ்சு மெல்ல அலட்சியமாய் நடந்து வந்து அருகில் நின்றது. தாய்க்கோழி சாம்பல் நிறக்குஞ்சை முறைத்துப் பார்த்தது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை சாம்பல் நிறக்குஞ்சு.
செவலைக்கோழி குஞ்சுகளிடம்,
“ குழந்தைகளே நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுக்குங்க..
நான்  ‘ கெக் ‘ ன்னு சொன்னா கவனம்னு அர்த்தம்
’ கேகெக்கேகேகே ‘ ன்னு கூப்பாடு போட்டா ஆபத்து ஆபத்து ஓடி வாங்க!ன்னு அர்த்தம்.
கெ கெ கெ ன்னு மெல்லக்கூப்பிட்டா இரை இருக்கு வாங்கன்னு அர்த்தம்..
இன்னிக்கு இது தான் உங்களுக்கு பாலபாடம். எல்லோரும் கேட்டுக்கிட்டீங்களா? “
என்று பேசியது. அம்மா சொல்வதை எல்லாக்குஞ்சுகளும் ஆர்வத்துடன் கேட்டன. சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் காதில் வாங்காமல் வாய்க்குள்ளேயே கிய்கிய்யா கிய்யா கிய்கிய்யா கிய்யா என்று பாட்டுப்பாடிக் கொண்டிருந்தது. செவலைக்கோழிக்குக் கவலையாக இருந்தது. இப்படி அலட்சியமாக இருக்கே இந்தச் சாம்பல் நிறக்குஞ்சு!
செவலைக்கோழி குஞ்சுகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
கருப்பு நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளை நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
கருப்பு வெள்ளைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
சாம்பல் குஞ்சு மட்டும் அம்மா சொன்னதைக் கேட்கவில்லை
சாம்பல் குஞ்சு கண்டபடி அலைந்து திரிந்தது. இரை தேடியது.
அன்று காலை செவலைக்கோழியும் குஞ்சுகளும் இரை தேடி குப்பைமேட்டை கிண்டிக் கொண்டிருந்தன. மேலே வானத்தில் பருந்து தன் நீண்ட சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருந்தது. அந்தப்பருந்தின் நிழல் கீழே பூமியில் விழுந்ததைப் பார்த்தது செவலைக்கோழி. உடனே செவலைக்கோழி, கேக்கேக்கேக்கே என்று அபாய எச்சரிக்கையைக் கத்தியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் அங்கங்கே கிடைத்த புதர்களுக்குள் பதுங்கிக் கொண்டன. செவலைக்கோழி சாம்பல் குஞ்சைத் தேடியது. காணவில்லை.
சிலநொடிகளுக்கு அப்புறம் சாம்பல் குஞ்சு ஒரு செடியின் மறைவிலிருந்து ஹாயாக கிய்கிய்யா கிய்கிய்யா கிய்கிய்யா என்று பாடிக்கொண்டே வெளியில் வந்தது. அது என்ன என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் சாம்பல் குஞ்சின் மீது பருந்தின் நிழல் விழுந்தது.
ஆ…ஐயோ… ஆபத்து வந்து விட்டதே… பருந்தின் இறகுச்சத்தம் சாம்பல் குஞ்சின் காதில் கேட்டது. அவ்வளவு தான் உயிர் போகப்போகிறது. இதோ பருந்தின் கால்களில் உள்ள கூர் நகங்கள் உடலைக் கிழிக்கப்போகிறது. என்ன செய்வது என்று சாம்பல் குஞ்சுக்குத் தெரியவில்லை. அப்படியே கண்களை மூடி உட்கார்ந்து விட்டது. கிய்யா கிய்யா கிய்யா
அப்போது ஆவேசமாய் செவலைக்கோழி பறந்து வந்து பருந்தின் மீது மோதியது. பருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து புரண்டது. என்ன நடந்தது என்று தெரியாமல் அப்படியே மேலே எழுந்து பறந்து போனது பருந்து.
சாம்பல் குஞ்சின் அருகில் செவலைக்கோழி நின்றது. கண்களை மூடி உட்கார்ந்திருந்த சாம்பல் குஞ்சின் தலையில் தன் அலகுகளால் மெல்லத் தடவியது. சாம்பல் குஞ்சுக்கு அப்போது தான் உயிர் வந்தது.
இப்போது செவலைக்கோழியின் சத்தத்துக்கு முதலில் வந்து நிற்பது யார் தெரியுமா?

நீங்களே சொல்லுங்கள். 
5+

Monday, 25 December 2017

காகம் கொண்ட தாகம்

காகம் கொண்ட தாகம்

உதயசங்கர்
ஒரு ஊரில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தில் இரண்டு காகங்கள் இருந்தன. ஒரு காகத்தின் பெயர் ஒல்லிக்குச்சி. இன்னொரு காகத்தின் பெயர் குண்டுப்பாச்சா. அப்போது கோடைகாலம். அதனால் வெயில் அதிகமாக இருந்தது. காகங்களுக்குத் தாகம் எடுத்தது. எங்கும் தண்ணீர் இல்லை. காகங்களுக்குத் தொண்டை வறண்டு போய் விட்டது. மூன்று நாட்களாக ஒரு சொட்டுத்தண்ணீர் குடிக்கவில்லை. காகங்களால் பேசக்கூட முடியவில்லை.
ஒல்லிக்குச்சி காகம் தன்னுடைய நண்பனைச் சைகையால் அழைத்தது. அருகில் மெல்ல தத்தித் தத்தி நடந்து வந்தது குண்டுப்பாச்சா காகம். அதன் காதில்
“ கா..கா..கா..நாம் இங்கிருந்து போய்விடுவோம். இங்கே தண்ணீர் கிடைக்காது. வேறு இடத்தில் தண்ணீர் கிடைக்கலாம்.. வா.பறந்து போகலாம் கா கா கா.”
என்று சொல்லியது. குண்டுப்பாச்சா காகம் ஒரு சோம்பேறி. அது உடனே,
“ காகாகா காகாகா… கடவுள் கைவிட மாட்டார்…எப்படியும் மழை பெய்யும்… தண்ணீர் கிடைக்கும்.. ஏன் வீணாக அலைய வேண்டும்? பேசாமல் இங்கேயே இருப்போம்…கா  கா ”
என்று ஒல்லிக்குச்சிக்காகத்திடம் கத்தியது. ஒல்லிக்குச்சிக்காகம் மறுபடியும் குண்டுப்பாச்சா காகத்தை அழைத்தது. குண்டுப்பாச்சா காகம் அசையவில்லை. கண்ணை மூடி உறங்கியது.
ஒல்லிக்குச்சி காகம் சிறகுகளை விரித்து அந்த ஆலமரத்தை விட்டுப் பறந்தது. வெகுதூரம் பறந்தது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பரிதவித்தது. செடி கொடிகள் காய்ந்து கருகிப் போய் இருந்தன. தண்ணீர் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
ஒல்லிக்குச்சி காகத்துக்குச் சிறகுகள் வலித்தன. பறக்க முடியாமல் கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தது. அப்போது தூரத்தில் ஒரு குடிசை வீடு தெரிந்தது. அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு சிறுமி ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அந்தத் தண்ணீரை எடுத்து வர அவள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து போய் வந்தாள். அவள் தட்டில் தண்ணீரை ஊற்றியதும் அவளைச் சுற்றி சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள், புறாக்கள், சின்னஞ்சிறு வட்டம் போட்டு பறந்து கொண்டிருந்தன.
அவள் தண்ணீரை ஊற்றியதும் எல்லோரும் அந்தத் தட்டைச் சுற்றி நின்று தண்ணீர் குடித்தன. ஒல்லிக்குச்சி காகம் அந்த முற்றத்தில் இறங்கியது. மெல்ல நடந்து தண்ணீர் இருந்த தட்டிலிருந்து தண்ணீரை சளப் சளப் என்று குடித்தது. தண்ணீரைக் குடித்தபிறகு தான் அதற்கு உயிர் வந்தமாதிரி இருந்தது. அந்தச் சிறுமியைப் பார்த்து
“ கா…கா…க்கா.. மிக்க நன்றி.. மிக்க நன்றி..”
என்று கத்தியது. அந்தச்சிறுமி ஒல்லிக்குச்சி காகத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
ஒல்லிக்குச்சி காகம் மீண்டும் தட்டில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டது. தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய நண்பன் குண்டுப்பாச்சா இருக்கும் ஆலமரத்தை நோக்கிப் பறந்தது. அப்போது ஒல்லிக்குச்சி காகம் நினைத்தது.
“ முயற்சி தான் கடவுள் “
நன்றி - வண்ணக்கதிர்Wednesday, 20 December 2017

ஒற்றுமையே பலம்

ஒற்றுமையே பலம்

உதயசங்கர்

ஒரு ஊரில் ஒரு சிறிய காடு இருந்தது. அந்தக்காட்டில் அணில், ஓணான், மரவட்டை, சில்வண்டு, கருவண்டு, தேனீக்கள், குளவிகள், விட்டில்கள், கட்டெறும்பு, சிற்றெறும்பு, கடுத்தவாலி எறும்பு, கருப்பு எறும்பு, என்று எல்லாவிதமான பூச்சி வகைகளும் இருந்தன.
காட்டின் நடுவில் ஒரு கட்டெறும்புக்கூட்டம் புற்று கட்டி அதில் குடியிருந்தன.
ஒரு நாள் காலை புற்றின் வாசலில் ராட்சசன் போல ஒரு ஓணான் உட்கார்ந்திருந்தது. அதன் முதுகில் ஊசியான செதில்கள் இருந்தன. உடல் முழுவதும் கவசம் அணிந்தது போல தோல் சொரசொரப்பாக இருந்தது. அதன் முட்டைக்கண்கள் இரண்டு பக்கமும் தனித்தனியாக சுழன்றன. தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தது.
காலையில் உணவு தேடுவதற்கு வரிசையாக வேலைக்காரக் கட்டெறும்புகள் புறப்பட்டன. புற்றின் வாசலுக்கு வெளியே வந்தது தான் தெரியும். ப்சக் என்று எதோ பசை போல ஒட்டி இழுத்தது. அடுத்த நொடியில் ஓணாண் வயிற்றுக்குள் போய் விழுந்தார்கள் கட்டெறும்புகள்.
பதறி அடித்து புற்றுக்குள் வந்த வேலைக்காரக்கட்டெறும்புகள் ராணியிடம் சென்று முறையிட்டன. கட்டெறும்பு ராணி மெதுவாக வாசல் அருகே பாதுகாப்பாக நின்று ஓணாணைப் பார்த்தாள். அது தன் வாயிலிருந்து நீட்டி இழுக்கும் நாக்கையும் பார்த்தாள். அதன் உருவத்தைப் பார்த்து அவளுக்கே பயம் வந்தது.
இரண்டு நாட்கள் கட்டெறும்புகள் வெளியே போகவில்லை.
மறுநாள் காலை மறுபடியும் உணவு தேடி புற்றின் வாசலுக்கு வந்தால் அங்கே ஓணான் நின்று நாக்கை சுழட்டிக் கொண்டிருந்தது. அன்றும் ஒரு நூறு கட்டெறும்புகள் ஓணான் வயிற்றில் போய் விழுந்தன. புற்றை விட்டு வெளியே வரவே பயமாக இருந்தது.
இப்படியே இதை விட்டால் ஒரு கட்டெறும்பு கூட மிஞ்சாது என்று கட்டெறும்பு ராணி நினைத்தாள்.
அன்று இரவு அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்தினாள். இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள்.
அந்த முடிவு…………………
மறுநாள் காலை கிழக்கு திசையில் இருந்து சூரியன் உதித்தான். வெளிச்சம் வந்த உடனேயே புற்றின் வாசலுக்கு ஓணான் வந்து உட்கார்ந்து கொண்டது. எந்த சத்தமும் இல்லை. வாசலில் ஒரு கண்ணும் வெளியில் ஒரு கண்ணுமாய் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டிருந்தது ஓணான்.
திடீரென சரசரவென்று சத்தம். புற்றிலிருந்த அத்தனை கட்டெறும்புகளும் வாசல் வழியே வெளியே வந்தன. அவ்வளவு கட்டெறும்புகளைப் பார்த்ததும் ஓணான் திகைத்து நின்று விட்டது.
முன்னால் கட்டெறும்பு ராணி வந்தாள். பெரிய படை போல கட்டெறும்புகள் ஓணான் மீது ஏறிக் கடித்தன. ஓணானின் கண், மூக்கு, வாய், நாக்கு, கைகள், கால்கள், வால், செதில்கள், என்று உடம்பின் அத்தனை இடங்களிலும் கடித்தன.
தங்களுடைய ரம்பம் போன்ற பற்களால் வலிமையாகக் கடித்தன. ஓணானால் ஓடக்கூட முடியவில்லை.
அங்கேயே ஓணான் இறந்து விட்டது.
கட்டெறும்பு ராணி அனைவரிடமும் நம் ஒற்றுமையே நம் வெற்றி என்று முழங்கியது. கட்டெறும்புகளுக்கு அது ஏற்கனவே தெரிந்து விட்டது இல்லையா?
நன்றி - வண்ணக்கதிர்
Wednesday, 13 December 2017

எறும்பும் ரோஜாவும்

எறும்பும் ரோஜாவும்

உதயசங்கர்
ஒரு ஊரில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மல்லிகை, முல்லை, பிச்சி, அரளி, ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, கனகாம்பரம், போன்ற பூச்செடிகள் இருந்தன.
வசந்தகாலம் வந்து விட்டது.
தோட்டத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கின.
பூக்களின் மணம் தேனீக்கள், தேன் சிட்டுகள், ஈக்கள், எறும்புகள், வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், என்று எல்லோரையும் அழைத்தது. அந்தத்தோட்டத்தில் ஒரு மூலையில் மண்ணிற்குக் கீழே சிற்றெறும்புக்கூட்டம் வீடு கட்டிக் குடியிருந்தது. அந்த எறும்புகள் சுறுசுறுப்பானவை. ஒரு விநாடி கூட சோம்பலாய் இருப்பதில்லை. எப்போதும் ஒற்றுமையாய் இருந்தன. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அன்புடன் வாழ்ந்து வந்தன.
அந்தக்கூட்டத்தில் ஒரு சுட்டி எறும்பு இருந்தது. அந்த எறும்பு யாருடனும் சேராது. தனியாகப் போகும் தனியாக வரும். யாராவது உதவி கேட்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடும்.
ஒரு நாள் காலையில் சுட்டி எறும்பு தூக்கம் கலைந்து எழுந்தது. அந்தச் சுட்டி எறும்புக்கு சரியான பசி. உணவைத்தேடி அலைந்தது. ஒரு ரோஜாச்செடியின் உச்சியில் ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தது. அந்த ரோஜாவின் வாசனை மூக்கைத் துளைத்தது. சுட்டி எறும்பு எப்படியாவது அந்த ரோஜா இதழ்களில் உள்ள தேனைக் குடித்து விட வேண்டும் என்று நினைத்தது.
  ரோஜாச்செடியில் ஏற வேண்டும். என்ன செய்வது? முட்கள் குத்தாமல் எப்படி ஏறுவது என்று யோசித்தது. அந்த ரோஜாச்செடியைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அப்போது காற்று வீசியது. அந்தக் காற்றில் ரோஜாச்செடியின் மீது ஒரு சிறுகுச்சி பறந்து வந்து சாய்ந்து நின்றது. சுட்டி எறும்புக்கு மகிழ்ச்சி. அந்த குச்சியின் மீது ஏறி நேரே ரோஜாச்செடியின் உச்சிக்குச் சென்று விட்டது.
மேலே சென்றதும் வேறு யாரும் அந்தக்குச்சி வழியாக வந்து விடக்கூடாது என்று சுட்டி எறும்பு நினைத்தது.
உடனே சுட்டி எறும்பு அந்தக்குச்சியைக் கீழே தள்ளிவிட்டது.
தனியாக அந்த ரோஜாப்பூவின் உள்ளே இருந்த தேனை வயிறு முட்டக்குடித்தது. வயிறு நிறைந்ததும் சுட்டி எறும்புக்கு உறக்கம் வந்தது. அப்படியே குறட்டை விட்டுத் தூங்கி விட்டது.
கண்விழித்துப்பார்த்தால் சுற்றிலும் ஒரே இருட்டு. வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன. இருட்டைக் கண்டால் எப்போதும் சுட்டி எறும்புக்குப் பயம். கீழே இறங்கலாம் இருட்டில் எப்படி இறங்க முடியும்? குச்சியும் இல்லை. சுட்டி எறும்புக்கு அழுகை வந்தது.
“ ஞீம்ம் ஞீம்ம்..நான் வீட்டுக்குப்போணும்… நான் வீட்டுக்குப் போணும்..” என்று அழுது கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று ரோஜாச்செடியின் மீது ஒரு குச்சி தெரிந்தது. அதைப்பார்த்த சுட்டி எறும்பு யோசிக்கவே இல்லை. வேகம் வேகமாக அந்தக்குச்சி வழியாகக் கீழே இறங்கியது.
அதனுடைய வீட்டை நோக்கி வேகமாக ஓடியது. பின்னால் ஏதோ சர சரவென்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது சுட்டி எறும்பு.
சுட்டி எறும்பு இறங்கி வந்த குச்சியும் அதன் பின்னால் வந்து கொண்டிருந்தது.
திகைத்து நின்ற சுட்டி எறும்பைச் சுற்றி சிற்றெறும்புக்கூட்டம்.
எல்லோரும் சுட்டி எறும்பைத் தூக்கித் தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
கண்டு பிடித்தோம் சுட்டியைக் கண்டு பிடித்தோம்
கண்டு பிடித்தோம் சுட்டியைக் கண்டு பிடித்தோம்
என்று பாட்டுப்பாடின. சுட்டி எறும்பு என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா?
சுட்டி எறும்பு எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லிக் கொண்டே இருந்தது.
நன்றி - மாயாபஜார்
( 5+ குழந்தைகளுக்கான கதை )Wednesday, 6 December 2017

அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது

எஸ்.ஆர். எம். குழுமத்தின் தமிழ்ப்பேராயம் வழங்கும் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது என். சி. பி.ஹெச். வெளியீடான பச்சை நிழல் குழந்தை இலக்கிய நூலுக்கு வழங்கப்படுகிறது.

Monday, 4 December 2017

குபீர்ராஜாவின் திட்டம்

குபீர்ராஜாவின் திட்டம்

உதயசங்கர்
குப்பையூர் நாட்டு ராஜா படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தார். கண்களைக் கசக்கிவிட்டுத் திறந்தார். ஒரு பெரிய கொட்டாவி விட்டார். அந்த கொட்டாவி வழியே இரவில் அவர் தின்று முடித்த ஸ்விட்சர்லாந்து காளைக்கன்று வெளியே குதித்தது. அதோடு சேர்த்துத் தின்ற இங்கிலாந்து புறாக்களும், பின்லாந்து குறும்பை ஆடுகளும் வெளியேறி விடக்கூடாதே என்று நினைத்த குபீர்ராஜா படக்கென்று வாயை மூடிக் கொண்டார். கண்களைத் திறந்ததும் அவர் பார்த்தது ஒரு சிலந்தி. அவர் படுத்து உறங்கிய சப்பரமஞ்சத்திலிருந்து எதிரே இருந்த இரவு விளக்குக்கு வலை பின்னிக் கொண்டிருந்தது. சற்று நேரம் அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அடடா.. என்ன அழகாய் வலை பின்னுகிறது. நாமும் அப்படி வலைபின்னி அந்தரத்தில் தொங்கினால் எப்படி இருக்கும்? அப்போது ஒரு ஏடிஸ் கொசு அவருடைய பரந்த முதுகில் உட்கார்ந்து கடித்தது. குபீர்ராஜா கைகளை அங்கும் இங்கும் வீசினார். முதுகைத் தொடக்கூட முடியவில்லை. கைகளை வீசியதால் சோர்ந்து போய் வலியைப் பொறுத்துக் கொண்டு அப்படியே இருந்தார்.
அவருடைய உடம்பிலிருந்து பி பாசிட்டிவ் ரத்தத்தை வயிறு முட்டக்குடித்த ஏடிஸ் கொசு அப்படியே கிறங்கிப்போய் மேலே பறந்தது. அப்படியே மேலே பறந்து பறந்து…. டக்.. சிலந்தி வலையில் போய் மாட்டிக்கொண்டது. அதைப்பார்த்த குபீர்ராஜாவுக்கு மகிழ்ச்சி. கைகளைத் தட்டி கெக்க்கெக்க்கே… என்று சிரித்தார். அவருடைய கைதட்டல் சத்தம் கேட்டு வேலைக்காரர்கள் ஓடிவந்தார்கள். குபீர்ராஜா கைகளைத் தட்டிச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர்களுக்கு ராஜா ஏன் சிரிக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் ராஜா சிரிக்கிறாரே. உடனே அவர்களும் கைகளைத் தட்டிச் சிரித்தனர். சிரிப்பாணி முடிந்து கட்டிலிலிருந்து கீழே இறங்கினார் ராஜா. தரையில் நெறுநெறுவென்று சத்தம். சன்னல் வழியே உள்ளே வந்து விழுந்த இலைகள் பழுத்துச் சருகாகிக் கிடந்தன. படுத்துப்போர்த்திய போர்வை கசங்கிக் கிடந்தது. அவருடைய படுக்கையில் ஒரே புழுதிக்காடு. வேலைக்காரர்கள் சுத்தம் செய்யப்போனால் குபீர்ராஜாவுக்குக் கோபம் வந்து விடும். அவருக்கு சுத்தமாக இருப்பது பிடிக்காது. யாரும் அவருடைய அறைக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவே போட்டுவிட்டார்.
அன்று அரண்மனைக்கு வெளியே ஒரே சத்தக்காடு. குப்பையூர் நாட்டின் எல்லாப்பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய குறைகளைச் சொல்வதற்காக வந்திருந்தார்கள். விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியவில்லை. மழைவரி! மண்வரி! விதை வரி! உரவரி! பூச்சிக்கொல்லி வரி! செடி வரி, பூ வரி, காய் வரி, என்று விதம் விதமாக வரிகள்! விவசாயிகளால் அவ்வளவு வரிகளைக் கொடுக்க முடியவில்லை. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அரசாங்க வேலைகளில் எல்லாம் வெளிநாட்டினருக்கு வேலை கொடுக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சம்பளம் பத்தவில்லை. ராஜாவே கடன் கொடுத்தார். பின்னர் கந்து வட்டி வசூலித்தார். கல்வி சரியில்லை என்று மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருந்தார்கள்.  பள்ளி, கல்லூரிகளை அந்த நாட்டு வியாபாரிகளிடம் விற்று விட்டார். வியாபாரிகள் கல்வியைக் கூவிக் கூவி விற்றார்கள். பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும். எல்லோரும் குரல் கொடுத்தனர். அரண்மனையின் சுவர்கள் அதிர்ந்தன. ராஜாவால் அரண்மனையில் இருக்க முடியவில்லை.
குபீர்ராஜா உடனே மந்திரிசபையைக் கூட்டினார்.
” என்னய்யா இப்படி தினமும் கூப்பாடா இருக்கு..”
“ அரசே! மக்கள் அப்படித்தான் எதையாச்சும் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்…. நாம் தான் சமாளிக்க வேண்டும்…”
“ என்ன செய்யலாம் என்று ராஜகுருவிடம் கேட்டீர்களா? “
“ இல்லை அரசே!..”
“ உடனே அந்த ஐ ஃபோனை எடுத்து அவரை அழையுங்கள்..”
மந்திரிகள் ஐ ஃபோனில் ராஜகுருவிடம் பேசினார்கள். பின்பு வாய் எல்லாம் பல்லாக இளித்துக்கொண்டே குபீர்ராஜாவிடம் வந்தார்கள்.
“ நம்முடைய நாட்டிலுள்ள பிரச்னைகளுக்குக் காரணம் குப்பை, தூசு, புழுதி.. “
குபீர்ராஜாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அப்போது மதிமந்திரி அரசரிடம்,
“ நாட்டில் குப்பைகள் அதிகமாகி விட்டதால் தான் விவசாயம் நடக்கவில்லை, நாட்டில் குப்பைகள் அதிகமாகி விட்டதால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.. நாட்டில் குப்பைகள் அதிகமாகி விட்டதால் சம்பளம் கொடுக்க முடியவில்லை…”
என்று பாட்டு படித்தார். அதைக் கேட்ட குபீர்ராஜா ஆச்சரியத்துடன் கைகளால் தன்னுடைய பெரிய முகத்தைத் தாங்கிப் பிடித்து,
“ அப்படியா மந்திரியாரே..”
“ அப்படித்தான் சொல்ல வேண்டும் அரசே..”
குபீர்ராஜாவுக்குப் புரிந்து விட்டது. அவ்வளவு தான். மறுநாள் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், எல்லாவற்றிலும்
 ” குப்பையூரை மாற்றுவோம். சுத்தவூர் ஆக்குவோம் ”
என்ற தலைப்பு செய்திகளுடன் குபீர்ராஜாவின் அறிக்கை வெளிவந்தது. நாட்டிலுள்ள எல்லாத்தெருக்களிலும் தண்டோரா போடப்பட்டது.
“ இனி யாரும் குப்பையைத் தெருவில் கொட்டக்கூடாது. எல்லோரும் தினமும் அரண்மணையில் உள்ள சேமிப்புக்கிடங்கில் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.”
குபீர்ராஜாவும் அரண்மனைக்கு முன்னால் குப்பை பொறுக்குகிற மாதிரி சில நிமிடங்கள் நடித்தார். பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு அதை ஒளிபரப்பினார்கள். மந்திரிகள் எல்லோரும் எல்லா நகரங்களிலும் போய் குப்பை பொறுக்கிய மாதிரியே நடித்தார்கள். ஆனால் மக்கள் உண்மையாகவே குப்பைகளை அள்ளினார்கள். அரண்மனை சேமிப்புக்கிடங்கில் கொண்டுபோய் கொட்டினார்கள். சில நாட்களிலே குப்பையூர் நாட்டில் குப்பைகள் இல்லை. எல்லாக்குப்பைகளும் அரண்மனையில் தான் குமிந்து கிடந்தது. மக்கள் மறுபடியும் குபீர்ராஜாவின் அரண்மனைக்கு வந்து தங்களது தேவைகளைச் சொல்லிக் கூப்பாடு போட்டார்கள்.
உடனே குபீர்ராஜா ஆணையிட்டார்.
தினமும் அரண்மனைக்குப்பைக்கிடங்கிலிருந்து குப்பைகளை அள்ளிக் கொண்டு போய் எல்லா ஊர்களிலும் போட வேண்டும். அதை மக்கள் அள்ளிக்கொண்டு வந்து அரண்மனையில் சேர்க்க வேண்டும்.
மக்களால் வேறு எந்த வேலையும் செய்யமுடியவில்லை. நாள் முழுவதும் குப்பைகளை அள்ளிக்கொண்டே இருக்கும்படி ஆயிற்று. மக்களுக்குக் கோபம் வந்தது. குபீர்ராஜாவிடம் போய் முறையிட்டனர். குபீர்ராஜா அவர்களை விரட்டி அடித்தார்.
ஊருக்கு வெளியே இருந்த குப்பைதேவதையிடம் சென்று முறையிட்டார்கள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த குப்பை தேவதைக்குக் கோபம் வந்தது. குப்பைதேவதை ஒரு மந்திரம் சொன்னாள்.
என்ன ஆச்சு தெரியுமா?
குப்பையூர் நாட்டில் உள்ள அத்தனை நகரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் குப்பைகள் பறந்து வந்து குப்பைராஜாவின் அரண்மனையில் விழுந்தன. குப்பைகள் மலைபோல் குமிந்து அரண்மனையை மூடி விட்டன. அந்தக்குப்பைஅரண்மனைக்குள்ளே குபீர்ராஜாவும் மந்திரிகளும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதற்குப்பிறகு எழுந்திரிக்கவே இல்லை.
குப்பையூர் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் எல்லோரும் கூடி ஒரு புதிய ராஜாவைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். குப்பைதேவதை மக்களின் மகிழ்ச்சியைப் பார்த்துச் சிரித்தாள்.Saturday, 11 November 2017

பொன்மாலைப்பொழுது- கு.அழகிரிசாமியும் நானும்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன்மாலைப்பொழுது - நிகழ்ச்சியில்
29-10-17 அன்று கு.அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை

https://youtu.be/2c_FO0lr2ao

மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிக்கொண்டிருந்த பேனா இன்னும் மூடப்படவில்லை –

மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிக்கொண்டிருந்த பேனா இன்னும் மூடப்படவில்லை –

உதயசங்கர்
” காலத்தின் மனசாட்சி தான் நல்ல இலக்கியம். சமகாலத்துப்பிரச்னைகள், துயரங்கள், சீரழிவுகள், சிதைவுகள், மக்கள் வாழ்வின்னல்கள், பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் உன்னத இலக்கியம் பற்றியெல்லாம் பேனா ஜம்பம் அடிக்கிறவர்களை வெறுக்கக்கற்றுக் கொள்ள வேண்டும் மக்களைப்பற்றிக் கவலைப்படுகிற கலை இலக்கியம் தான் அசலான மக்கள் இலக்கியமாக இருக்க முடியும். “  - பூமாயன் சிறுகதைத்தொகுப்பு முன்னுரையில் மேலாண்மை பொன்னுச்சாமி.
1972- நவம்பர் மாதச்செம்மலரில் பரிசு என்ற சிறுகதையின் மூலம் தன் எழுத்துப்பயணத்தைத் துவக்கிய செ.பொன்னுச்சாமி தன்னுடைய இறுதி நாட்கள் வரை எழுதிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிற மேலாண்மை பொன்னுச்சாமி ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள மேலாண்மறை என்ற குக்கிராமத்திலிருந்து இலக்கியத்துக்குள் அடி எடுத்து வைத்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருடைய பால்யகாலமும் இளமைக்காலமும் அவ்வளவு உவப்பானதல்ல. ஊர் ஊராக சைக்கிளில் சென்று புளி விற்றிருக்கிறார். கருப்பட்டி விற்றிருக்கிறார். கருவாடு விற்றிருக்கிறார்.
வாழ்க்கையோடு மல்லுக்கட்டிக்கொண்டு இடதுசாரித்தோழர்களுடைய தொடர்பினால் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறார். அப்போது ஒன்றாக இருந்த ராமநாதபுரம் மாவட்டச்செயலாளராக செயலாற்றிய தோழர்.எஸ்.ஏ.பி. அவருக்கு ஆசானாக இருந்திருக்கிறார். மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் எழுதி வைத்திருந்த ஒரு குயர் நோட்டை வாசித்து அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார். எஸ்.ஏ.பி. வாசித்ததில் இருந்து தேர்ந்தெடுத்து செம்மலருக்கு அனுப்பச்சொல்லி வழிகாட்டியிருக்கிறார். அப்படித்தான் மேலாண்மை பொன்னுச்சாமி என்கிற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் உதித்தார்.
 பெருந்தமிழ் வாசகப்பரப்பிற்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கைப்பாடுகளை, பிரச்னைகளைத் தன்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வெளிப்படுத்துகிற எழுத்தாளுமையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.70-களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை உயர்சாதியினர் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம் முடிவுக்கு வரத்தொடங்கியிருந்தது. தமிழிலக்கியம் இதுவரை கண்டிராத புதிய திசைகளிலிருந்து புதிய குரல்கள் புதிய வாழ்க்கைப்பாடுகளைப் பேசத்தொடங்கியிருந்தது. குறிப்பாக நாகம்மாவை எழுதி வட்டார இலக்கியப்போக்கைத் துவக்கி வைத்த ஆர்.ஷண்முகசுந்தரம், வட்டார இலக்கியப்போக்கை ஆழமாக ஏர் பிடித்து உழுது பதமாக்கிய கி.ராஜநாராயணன், தொடர்ந்து பயிர்செய்து படைப்புகளை அறுவடை செய்த  பொன்னீலன், நாஞ்சில்நாடன், பூமணி, என்ற படைப்பாளிகளுக்குப் பின்னால் வறண்ட கரிசல் மண்ணிலிருந்து எளிய மக்களின் குரலாக ஒலித்த குரல் மேலாண்மை பொன்னுச்சாமியின் குரல்.
அதேபோல முற்போக்கு இலக்கியத்தில் தொமுசி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், விந்தன், கு.சி.பா. என்று படைப்பாளிகளின் வரிசையில் தன்னை முற்போக்கு எழுத்தாளன் என்ற பிரகடனத்தோடு இணைத்துக் கொண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. எழுதி எழுதியே தன்னுடைய எழுத்தைச் செதுக்கியவர். அவரைச்சுற்றி அவர் கண்ட மக்களின் வாழ்க்கை அவருக்குள் ஏற்படுத்திய நெருக்கடியே அவரை எழுதத்தூண்டியது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மக்களின் வாழ்க்கைப்பாடுகளிலிருந்து சற்றும் விலகாமல் தன்னுடைய கதைகளை எழுதியவர்.
மனிதவாழ்வின் அவலங்களை மட்டுமல்ல அவனுடைய உன்னதங்களையும் எழுதிப்பார்த்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி. உள்மனிதன் என்ற கதையில் காலை நேர டவுண்பஸ் நெருக்கடி, கோபம், தாபம், வசவுக்காடு, என்று பஸ்ஸே எரிச்சலுடன் நகர்ந்து கொண்டிருக்கும். திடீரென பிரசவவலி வந்த பெண்ணின் அவஸ்தையில் பஸ்ஸே தாயாக மாறி பணிவிடை செய்யும். அந்தப்பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகு மறுபடியும் பஸ் கசகசவென மாறிவிடும். மனிதன் அவசியம் நேரும்போது தன்னுடைய உன்னதத்தைக் காட்டுகிறான். அந்த உன்னததருணத்தை அவனே தாங்க முடியாமல் மறுபடியும் சாதாரணணாகி விடுகிறான். அதேபோல மயிலும் கிளியும் என்ற கதையில் கரிசக்காடுகளில் வெள்ளாமையை அழிச்சாட்டியம் பண்ணுகிற கிளிக்கழுதைகளையும், மயில்ச்சனியன்களையும் விரட்டுவதற்கு அங்கும் இங்கும் ஓடி அம்மா படுகிறபாட்டைப் பார்த்து பரிதவிக்கிற மகன் கிளிகளையும் மயில்களையும் கொல்வதற்காக மருந்து வாங்கி வைக்கிறான். தற்செயலாய் கேட்கிற அம்மாவின் உரையாடலில் பொங்கும் தாய்மையுணர்வு அந்தக்கிளிகளையும் மயில்களையும் கூட தன் பிள்ளைகளைப்போல நினைக்கிற பரிவு அவனிடம் மாற்றத்தை உருவாக்கி விடுகிறது.
. 1970-களில் துவங்கப்பட்ட செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த கே.எம்.முத்தையாவைத் தன்னுடைய ஞானத்தந்தையாக குறிப்பிடுவார் மேலாண்மை. கே.எம்.முத்தையாவின் ஊக்கமும் உற்சாகமும் அவரை நேரடி அரசியலில் இருந்து தீவிர எழுத்துப்பணிக்குத் திருப்பியது. ஒரு நேரத்தில் ஒரே செம்மலரில் மேலாண்மை பொன்னுச்சாமியின் இரண்டு கதைகள் கூட வந்திருக்கின்றன. முற்போக்கு சிறுகதைகள் என்றால் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் முதலில் தோன்றுகிற அளவுக்குத் தன்னுடைய அயராத உழைப்பால் எழுத்துப்பணியைச் செய்தார்.
2.
 70-களில் கோவில்பட்டியில் இருந்த பால்வண்ணம், ஆர்.எஸ்.மணி, தேவப்ரகாஷ், போன்ற நண்பர்களிடம் ஒவ்வொரு மாதமும் செம்மலரில் வெளிவந்த அவருடைய கதைகளைப் பற்றிய கருத்துகளையும் விமரிசனங்களையும் கேட்பதற்காக ஊரிலிருந்து சைக்கிளை மிதித்து வருவாராம். அவர்களும் அவருக்கு டீ,வடை, வாங்கிக் கொடுத்து கடுமையான விமரிசனங்களை அவரிடம் சொல்வார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வாராம். அவர்கள் சொன்னதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த கதையை எழுதி செம்மலருக்கு அனுப்பி வைப்பார். அந்தக் கதை வந்ததும் மறுபடியும் கோவில்பட்டிக்கு வருவார். இப்படி அவர் விமரிசனங்களை விரும்பி வாங்கியிருக்கிறார். அதை அவருடைய அனைத்துத் தொகுப்புகளிலும் கூடப் பார்க்க முடியும். முன்னுரையின் முடிவில்
 “ உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும். நீங்கள் கண்டுணர்ந்து சொல்கிற குறைகளும் கூட என்னைச் செதுக்கி மேலும் கூர்மையாக்கும். இரண்டுமே இலக்கியத்துக்குச் சிறப்பு செய்யும். “
என்று எழுதியிருக்கிறார்.
 அவர்களுக்குப்பின்னால் நேரடியாக புதுமைப்பித்தனிலிருந்து வாசிப்பைத் துவங்கிய என்னைப் போன்றவர்களின் கருத்துக்களையும் விமரிசனங்களையும் கேட்டுக் கொள்வார்.
விமரிசனங்களைக் கண்டு அஞ்சி நடுங்குகிற – விமரிசனங்களைத் தவிர்க்க நினைக்கிற-எழுத்தாளர்கள் மத்தியில் விமரிசனங்களைத் தேடிப்போய் வாங்குகிற எழுத்தாளராக இருந்தார் மேலாண்மை பொன்னுச்சாமி. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு சாகித்ய அகாடமி விருது பெறுகிற அளவிற்கான படைப்புகளை எழுதியிருக்கிற மேலாண்மையின் அர்ப்பணிப்பு எல்லோரும் பின்பற்றத்தக்கது. கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் வழி தன்னை ஒரு கதை சொல்லியாக நிலை நிறுத்திக்கொண்டவர். யதார்த்தவாதம், விமரிசன யதார்த்த வாதம், சோசலிச யதார்த்தவாதம், என்ற இலக்கியக்கோட்பாடுகளில் உரத்து நின்று எழுதியவர்.
அவருடைய சிக்கல், சிடுக்குகள் இல்லாத எளிய முறையிலான கதை சொல்லல் தான் அவருடைய பாணி என்று சொல்லலாம். மத்தியதரவர்க்க எழுத்தாளர்களிடம் இருக்கும் ஒருவித எழுத்துப்பாசாங்கு அவரிடம் கிடையாது. நேரிடையாகக் கதை சொல்வார். தான் கண்ட கேட்ட கிராமத்து மனிதர்களைப் பற்றி, ( பூமாயன் ) ஆண் பெண் உறவுச்சிக்கல்களைப் பற்றி ( மன உடைப்பு, விளக்குமாறு ) கிராமங்களில் வாழும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி ( ஊர்ப்பண்பு)  அவருடைய கதைகளில் கையாண்ட விதமும், மனித உணர்வுகளின் பேதங்களை மட்டுமல்ல, உன்னதங்களையும், உணர்ச்சித்ததும்பல்களையும்,உரத்துச்சொன்ன மகத்தான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி. தன்னுடைய படைப்புகளில் கலை அமைதி, வடிவ நேர்த்தி, உள்ளடக்கப்பொருத்தம் என்று பெரிய அளவில் கவலைப்பட்டவரில்லை. உணர்ச்சி கொப்பளிக்கும் நிகழ்வுகள், விவாதங்கள், உரத்துப்பேசும் கரிசல் மனிதர்கள், என்று ஒரு கிராமத்தையே  தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர்.
கல்கி, பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பரந்த வாகசப்பரப்புக்குள் வந்த மேலாண்மை பொன்னுச்சாமி, ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகள் எழுதி பெரும் புகழ் பெற்றார். மானுடம் வெல்லும், சிபிகள், கூரை, உள்மனிதன், பூக்காத மாலை, பூச்சுமை, மானுடப்பிரவாகம், மனப்பூ, மின்சாரப்பூ, பூமாயன், போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறுகதை நூல்களையும், கோடுகள், தழும்பு, மரம், பாசத்தீ, போன்ற குறுநாவல் தொகுப்புகளையும், முற்றுகை, இனி, அச்சமே நரகம், ஊர்மண், போன்ற நாவல்களையும், சிறுகதைப்படைப்பின் உள்விவகாரம் என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. தான் ஒரு இடது சாரி எழுத்தாளன் என்பதை எந்த ஒரு இடத்திலும் உரத்துப்பேசுகிறவர். எல்லோர் மீதும் மிகவும் உரிமையுடன் பழகுகிற, ஆலோசனை சொல்கிற, ஆலோசனை கேட்கிற எளிய மனிதர்.
1975- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். தமுஎகச அமைப்பை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெரும் ஈடுபாடு காட்டியவர். தமுஎகச வின் தலைவராகவும், துணைப்பொதுச்செயலாளராகவும், துணைத்தலைவராகவும் பலமுறை தேர்வு செய்யபட்டவர். முற்போக்கு எழுத்தாளர் படை ஒன்றினை உருவாக்க கடுமையாக உழைத்தவர். எழுத்தும் இயக்கமும் என்று இடையறாது இயங்கியவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டுவார். வெகுளித்தனமான அவருடைய உரையாடல் எல்லோரையும் மிக நெருக்கமாக்கிக் கொள்ளும். என்மீது தனிப்பட்ட அக்கறையும் அன்பும் கொண்ட மேலாண்மை பொன்னுச்சாமியிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் ஒரே நேரத்தில் இரண்டு டீ குடிப்பார். வெளிப்படையான வெள்ளந்தியான அவருடைய எளிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தும். இதோ டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். என்னருகில் இருந்த நண்பர் கேட்டார்,
”“ என்ன அதிசயமா அடுத்தடுத்து ரெண்டு டீ குடிக்கிறீங்க?..”
நான் மேலாண்மை பொன்னுச்சாமி என்ற மகத்தான படைப்பாளிக்கு, தமிழ் இலக்கியத்துக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்த எழுத்தாளுமைக்கு விடை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
போய் வாருங்கள் எங்கள் அருமைத்தோழரே!
உங்கள் எழுத்துகளை நாங்கள் இப்பொழுதும் எப்பொழுதும் வாசித்து உங்களை நினைவு கூர்வோம்!
நன்றி - தீக்கதிர் இலக்கியச்சோலை
Thursday, 28 September 2017

பேசும் தாடி

பேசும் தாடி

முதலில் இந்த அருமையான படைப்பை கொண்டுவந்தஎழுத்தாளர் உதயசங்கர் ,பதிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஓவியர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது சூர்யாவும் சுகானாவும் பத்து சித்திர குள்ளன்களும் பத்து சித்திர குள்ளிகளும் நம்மையும் அவர்களுடன் சேர்த்து பறக்க வைக்கின்றனர். தேனீக் கூட்டுக்குள்ளையும் , எறும்பின் வீட்டிற்கும் பட்டாம்பூச்சி முதுகில் உப்பு மூட்டையும் ஏற்றி சுற்றி காட்டுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். எனது மகளுக்கு கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக் காட்டினேன். தினமும் சின்ன இடைவேளை அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் அவள் காத்திருப்பதை அழகாக ரசித்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அவளுக்கு கதை சொல்வதை விட புத்தகத்தை வாசித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்திற்கு அவளுக்கு அதிகாமக விளக்கம் சொல்லவில்லை. அவளே வாசிக்கையில் புரிந்துக்கொண்டிருந்தாள். உதயசங்கர் அவர்களின் எளிமையான மொழி அதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அத்துடன் இந்தக் கதைகளம் வீட்டில் நடப்பதால் கதையை தனதாக்கிக் கொண்டாள். கதையின் முடிவில் தாத்தா-பாட்டி ஊருக்கும் செல்லும் போது இவள் இங்கு சோகமாகிவிட்டாள். "எனக்கு இந்தக் கதையே பிடிக்கல" என்ற அழவும் செய்துவிட்டாள். ஆனால் கதையுடன் முழுவதும் மூழ்கிவிட்டாள் என்பதே நிதர்சனம்.
கதையில் தாத்தா தாடியிலிருந்த அந்த பத்து சித்திர குள்ளனும் ஆச்சியின் சுருக்கு பையிலிருந்த சித்திர குள்ளியும் தற்பொழுது எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். நீங்கள் யாராவது எங்க வீட்டிற்கு வந்தால் உங்கள் மீதும் வண்ண வண்ணப் பொடிகளை தூவி உங்களையும் எங்களுடன் சேர்த்து குட்டியாக மாற்றி வண்ணத்திப் பூச்சி முதுகில் ஏற்றிவிடுவார்கள்.

பிரபு ராஜேந்திரன்